பாலியல் புகாருக்கு உள்ளான பிபிசி தொகுப்பாளர்: பெயரை வெளியிட்ட மனைவி!

பாலியல் புகாருக்கு உள்ளான பிபிசி தொகுப்பாளர்: பெயரை வெளியிட்ட மனைவி!
Published on

இங்கிலாந்தில் கடந்த ஒரு வாரமாக பரபரப்பாகப் பேசப்பட்ட பாலியல் புகாருக்குள்ளான பிபிசி தொகுப்பாளர் யார் என்ற கேள்விக்கு தற்போது விடை காணப்பட்டுள்ளது. பாலியல் புகாருக்கு உள்ளான பிபிசி தொகுப்பாளர் தன்னுடைய கணவர் எட்வர்ட்ஸ் தான் என அவரின் மனைவியே தெரிவித்திருப்பது கவனம்பெற்றுள்ளது.

தனிநபர் சர்ச்சைகள், பரபரப்பான செய்திகளுக்குப் பெயர்போன தி சன் செய்தியேட்டில், கடந்த ஏழாம் தேதி வெளியான பாலியல் புகார் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கட்டுரையில் 20 வயதாகும் இளைஞரிடம் பிபிசி தொலைக்காட்சியின் தொகுப்புரையாளர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டப்பட்டு இருந்தது.

மேலும், குறிப்பிட்ட அந்த இளைஞர் 17 வயதாக இருக்கும்போது அவரிடம் பாலியல் ஒளிப்படங்களை பிபிசி தொகுப்புரையாளர் வாங்கினார் என்றும் அதற்காக ஒரு தொகையை அந்த இளைஞருக்கு அளித்தார் என்றும் தி சன் ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக கடந்த மே 18ஆம் தேதி குறிப்பிட்ட இளைஞரின் குடும்பத்தினர், பிபிசி அலுவலகத்துக்குச் சென்று முறையிட்டனர். பிபிசி தரப்பில் மேற்கொண்டு விவரங்களைக் கேட்டு அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. புகார் அளித்தவர் தரப்பில் பதில் அனுப்பாததால், அவர்களின் தொலைபேசி எண்ணுக்கு பிபிசி தொடர்புகொண்டதாகவும் அதற்கும் பதில் கிடைக்கவில்லை என்றும் பிபிசி தரப்பில் ஜூன் 6ஆம் தேதி கூறப்பட்டது.

ஜூலை 6ஆம் தேதியன்று செய்தியை வெளியிட்ட சன் ஊடகத்தின் தரப்பிலிருந்து, குறிப்பிட்ட அந்த தொகுப்புரையாளர் ஹூ எட்வர்ட்ஸ் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பிபிசியின் உள்ளக புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, அதன்படி எட்வர்ட்ஸ் தொலைக்காட்சியில் தோன்றவிடாமல் நிறுத்திவைக்கப்பட்டார். ஜூலை 9ஆம் தேதியன்று எட்வர்ட்ஸை பணியிலிருந்து இடைநீக்கம் செய்துவிட்டதாக பிபிசி நிர்வாகம் தன் ஊழியர்களுக்கும் ஊடகங்களுக்கும் முறைப்படி அறிவிப்பு வெளியிட்டது. மறுநாள் முதல் பிபிசியின் தனிப்பட்ட விசாரணையை நிறுத்திக்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.

கடந்த 11ஆம் தேதி பிபிசியில் வெளியிடப்பட்ட செய்தியில், இரண்டாவதாக இளைஞர் ஒருவரும் எட்வர்ட்ஸ் மீது பாலியல் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. டேட்டிங் செயலி மூலம் அவரைச் சந்தித்ததாகவும் இந்த விவகாரத்தில் அவரின் பெயரை பகிரங்கப்படுத்தியபோது அவர் மிரட்டல் விடுத்தார் என்றும் 2வது புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து நேற்று ஜூன் 12ஆம் தேதி எட்வர்ட்சின் மனைவி விக்கி ஃபிலிண்ட், பெயர் குறிப்பிடப்படாமல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தன் கணவர்தான் என உண்மையைப் போட்டு உடைத்துவிட்டார். பிபிசியின் இரவு பத்து மணிச் செய்திகளை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் எட்வர்ட்ஸ்தான் வழங்கிவந்தார். பிரிட்டன் அரசி மறைவு உட்பட முக்கியமான பல தருணங்களை, அவரே முதல் செய்தியாக அறிவித்திருக்கிறார். பிபிசியிலேயே மிக அதிகமான ஊதியம் பெற்ற தொகுப்புரையாளராகவும் எட்வர்ட்ஸ் முக்கியத்துவம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com