உஷார்! சைபர் கிரைம் போலீஸாரின் புதிய எச்சரிக்கை!

உஷார்! சைபர் கிரைம் போலீஸாரின் புதிய எச்சரிக்கை!
Published on

சைபர் கிரைமில் பலவகைகள் உண்டு. அதில் மாட்டிக் கொள்ளாமல் தப்புவது என்பது இந்த 21 ஆம் நூற்றாண்டில் பெரும் போராட்டமாகத்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. பேராசை அல்லது அறியாமை காரணமாகத் தினம் தினம் விதம் விதமாக சைபர் கிரைம் குற்றங்களில் நமே வேண்டி விரும்பி மாட்டிக் கொண்டு அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகின்றோம்.

இந்நிலையில், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநரான சஞ்சய் குமார் தற்போது புதியதொரு எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறித்து நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.

அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், தமிழக சைபர் கிரைம் பிரிவுக்கு சமீபத்தில் வந்த ஒரு புகாரின் அடிப்படையில் பார்த்தால்; சமூக வலைதளங்கள் மூலம் தொடர்புகொண்டு மக்களின் பேராசையை தூண்டி நிதி மோசடி செய்யும் ஆன்லைன் அச்சுறுத்தல்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வகை மோசடியில் ஈடுபடுபவர்கள் வாட்ஸ்அப், SMS, டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் அல்லது யூ டியூப் விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை எளிதில் தொடர்பு கொள்கிறார்கள்.

இவர்கள் முதலில் சில யூடியூப் வீடியோக்கள், ஹோட்டல்களின் இணையதளங்கள் போன்றவற்றுக்கு 'லைக்' மற்றும் 'கமெண்ட்' இடுவதால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று சொல்லி மக்களின் பேராசையைத் தூண்டுகிறார்கள்.

பின்னர் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட முன் பணம் செலுத்தி அதற்கு மாற்றாக அதிக பணம் பெறும் டாஸ்க்கை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இவர்கள் தங்களை சமூக சேவை செய்யும் யூ டியூப் புரமோட்டர்ஸ் என்றோ அல்லது ஆன்லைன் வேலைகளை வழங்கும் யூடியூப் விளம்பரதாரர் என்றோ தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகள், பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் தங்களை தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களை, முதலில் லைக் , கமெண்ட் செய்யச் சொல்லி பணம் தருகிறார்கள், பிறகு இடையில் ஆன்லைன் மூலம் முன் பணம் செலுத்தி அதிக பணம் பெறும் டாஸ்க்கை அறிமுகப்படுத்தி, மக்களை பிட்காயின் அல்லது கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதான சில டாஸ்க்குகளில் கலந்து கொள்ள வைக்கிறார்கள். பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் இணைய போர்ட்டலில் பயனர் ID மற்றும் பாஸ்வேர்டு உருவாக்க வழிகாட்டுவார்கள்.

இதற்குப் பிறகு தான் இருக்கிறது நிஜமான மோசடி ஆட்டம்!

இது கிட்டத்தட்ட ஸ்டாக் மார்க்கெட் மோசடி போன்றது தான். குறிப்பிட்ட அளவுக்கு முதலீடு செய்யச் சொல்லி சில இணையதளங்களை இவர்கள் அறிமுகப்படுத்துவார்கள். அவற்றின் மூலமாக தாங்கள் சம்பாதித்த தொகை என ஒன்றை இவர்கள் அதே இணையதள போர்ட்டல் பக்கத்தில் அசெட்ஸ் (சொத்து) எனும் பெயரில் தங்களிடம் வசமாக மாட்டும் அப்பாவிகளிடம் ஆதாரமாகக் காட்டுவார்கள். அந்த போர்ட்டலில் நாட்கள் செல்லச் செல்ல டாஸ்க்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும் முதலீடு செய்யப்படும் தொகையும் அதிகமாக இருக்கும். இப்போது போர்ட்டல் பக்கத்தில் சொத்துக்களை வெறுமே பார்க்க மட்டுமே முடியும். எந்த நேரத்திலும், மேற்கூறிய சொத்துக்களில் காட்டப்படும் தொகையை திரும்பப் பெற முடியாது. இதை பொதுமக்கள் தங்கள் வழிகாட்டியிடம் தெரிவிக்கும் போது, கிரெடிட் ஸ்கோர் மிகவும் குறைந்துவிட்டது, தவறான விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்; வருமான வரித் துறைக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை; மொத்த தொகையைத் திரும்பப் பெறுவதற்கு டிக்கெட் உருவாக்க வேண்டும், சொத்து மதிப்பில் 30% டெபாசிட் செய்ய வேண்டும் போன்ற நொண்டிச் சாக்குகளைக் கூறுவார்கள். கடைசியில் பெரும் பணம் இழந்தது இழந்தது தான். இதில் சிலர் பேராசையால் பெரும்பணம் முதலீடு செய்து மீட்க முடியாத அளவுக்கு கடனில் மூழ்கி தற்கொலை வரை செல்லும் நில்லைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

எனவே பொதுமக்கள் இனிவரும் நாட்களில் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பும் மெஸேஜ்களுக்கு பதிலளிக்கவோ, லிங்க்கை கிளிக் செய்யவோ வேண்டாம் என்று தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநரான சஞ்சய் குமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் தங்களுக்கு நேரும் ஆன்லைன் நிதி இழப்பு புகார்களுக்கு உடனடியாக ஹெல்ப்லைன் எண் 1930 ஐ தொடர்பு கொள்ளலாம். விரைவாக தொடர்புகொண்டு புகார் கொடுத்தால் தான் இழந்த பணத்தை உடனே மீட்க முடியும். நிதி இழப்பு அல்லாத வேறு விதமான சைபர் புகார்களுக்கு www.cybercrime.gov.in இல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com