
அமெரிக்காவின் நியூயார்க்கில் சீக்கிய போலீஸ் அதிகாரி ஒருவர் தாடி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டுள்ள விவகாரம், பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பஞ்சாபைப் பூர்வீகமாகக் கொண்ட சீக்கியர்கள், பிரிட்டன், அமெரிக்கா என பல மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் கணிசமானவர்கள் அந்தந்த நாடுகளின் காவல்துறை, இராணுவம் ஆகியவற்றிலும் பணியாற்றுகின்றனர்.
இப்படி, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம், ஜேம்ஸ்டவுனில் சரண்ஜோட் டிவானா என்பவர் மாநிலக் காவலதுறையில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர் தன்னுடைய திருமணத்துக்காக, தாடி வைத்துக்கொள்ள துறை அதிகாரியிடம் அனுமதி கேட்டார்.தலைப்பாகையும் தாடி வைத்துக்கொள்வதும் சீக்கிய ஆண்கள் கடைப்பிடிக்கும் மதப் பழக்கம் என்றாலும், நியூயார்க் மாநில காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு இதில் சிக்கல் உள்ளது.
அவர்கள் தலைமுடியை சிறிது மட்டுமே இருக்கும்படி வெட்டி, முகத்தை சவரம் செய்திருக்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக, டிவானாவின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது. அதற்கு மேலிடத்தில் கூறிய காரணம் என்னவென்றால், சில பிரச்னைகளின்போது வாயு முகமூடி மாட்டிக்கொள்வதற்கு சிரமம் ஏற்படுத்தும் என்பதுதான். இத்தகவலை, நியூயார்க் மாநில காவல்துறை அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீக்கியர் அனைவரும் தலைப்பாகை வைத்துக்கொள்வது மதரீதியான வழக்கம்; ஆனால் டிவானா பணியில் இருக்கும்போது அப்படி அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை வைக்கவில்லை. காரணம், தாடி வைத்துக்கொள்ளவே அனுமதி கிடைக்க வில்லையே என்கிறார், காவல்துறை சங்கத் தலைவர் சார்லி மர்ஃபி. இந்த அனுமதி மறுப்பை, தண்டனையோடு ஒப்பிடுகிறார் அவர்.
சட்டத்தைச் செயல்படுத்தும் அதிகாரிகள் உள்பட அனைத்து நியூயார்க் மக்களும் தங்கள் மதத்தைக் கடைப்பிடிக்கும் சமயங்களில் பணியாளரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டிவானாவின் கோரிக்கை எப்போது, எதனால் மறுக்கப்பட்டது என்பதைப் பற்றி அறிவதற்காக, ஏபி செய்தி நிறுவனம் நியூயார்க் மாநிலக் காவல்துறையைத் தொடர்புகொண்டது. அப்போது பேசியவர், கருத்து எதையும் கூறமுடியாது என மறுத்துவிட்டார்.
ஆனால், “ எங்களுடைய அதிகார மட்டங்களில் பன்மைத்துவம், சமத்துவம், உள்ளீர்த்துக்கொள்வதை நாங்கள் மதிக்கிறோம். நியூயார்க் காவல்துறை பணியாளர் ஒவ்வொருவரின் மருத்துவ/ மதரீதியான கோரிக்கைகளை, உரிய கவனிப்புடன் நாங்கள் கையாண்டு வருகிறோம்.” என்கிறார், காவல்துறையின் பேச்சாளர் டியன்னா கோஹன்.
குறிப்பிட்ட சீக்கியரான டிவானா, ஆறு ஆண்டுகளாக நியூயார்க் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். பெரும்பாலான அமெரிக்கா மாநிலங்களில் காவல்துறையின் விதிகள் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் கொண்டுவரப்பட்டவையாகவே இருக்கின்றன. முகத்தை சுத்த மழித்துக்கொள்ள வேண்டும் எனும் விதி, இராணுவத்தினரின் தோற்றம் இருக்கவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அவை சில இன, மதக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு தங்களின் மத/இனக் கடமைகளைச் செய்வதற்கு தடையாக இருக்கிறது என்றும் அந்தப் பழைய விதிகள் இன்னும் தேவையா என்றும் விவாதம் நீண்ட காலமாக இருந்துவருகிறது.
அண்மைக் காலமாக, பல மாநிலங்களின் காவல்துறைகளில் விதிகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்கள் அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெட்ராய்டு காவ துறை 2016ஆம் ஆண்டில் தங்களுடைய அதிகாரிகள் தாடி வைத்துக்கொள்ள அனுமதித்தது. பிலடெல்பியா மாநிலத்தில் சிறு தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளித்தது. அதாவது, முகத்தை மழித்துக்கொண்டால்கூட மீண்டும் சிறிய அளவுக்குதான் முடி வளர்க்கூடிய ஆப்ரோ இனத்தவரைப் போல இருந்தால், அது ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2021இல் நியூஜெர்சியின் நேவார்க்கில் முஸ்லிம் அதிகாரிகள் முகமறைப்பு, தலைக்காப்பு அணிந்துகொள்ள அனுமதி அளித்தது. நியூயார்க் நகரத்தில்கூட சீக்கியர்கள் 2016இல் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டில், கூட்டாட்சி நீதிமன்றம் ஒன்று கடற்படைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீக்கியர் ஒருவர், தன் பயிற்சியின்போது தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.
இப்போது, நியூயார்க் மாநில காவல் துறை தலைப்பாகை குறித்து கொள்கை முடிவெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இவ்வளவு களேபரத்துக்கு முன்னர், 2019ஆம் ஆண்டில் நியூயார்க்கின் அரசு முகமைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும், தங்கள் பணியாளர்களின் மதரீதியான பழக்கவழக்கத்துக்கான அணிகலன், உடைகள், தாடி வைப்பது போன்றவற்றை அனுமதிக்க வேண்டும்; ஒரே விதிவிலக்கு, அது அவர்களின் வேலைக் கடமைக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபடி இருக்கவேண்டும் என்பதுதான்! இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, வேலை அளிப்பவர்களை தங்கள் ஊழியர் கொள்கையில் இதை உள்ளடக்கியுள்ளார்களா என உறுதிப்படுத்துமாறு கூறியது.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது உடனிருந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் டேவிட் வெப்ரின், டிவானாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், இது சட்டரீதியாக வழக்கு போடும் அளவுக்கானது என்று குறிப்பிட்டுள்ளார்.
யார் ஒருவரும் தன் நாட்டுக்கான சேவையைச் செய்யும்போது மதரீதியான கடமையை விட்டுவிடவும் முடியாது என்கிறார், நியூயார்க் மாநில காவல்துறை சார்ஜண்ட்டும் சீக்கிய அதிகாரிகள் சங்கத் தலைவருமான குர்விந்தர் சிங். என்றாவது ஒரு நாள் நியூயார்க் மாநில காவல்துறையில் தலைப்பாகையும் தாடியும் வைத்திருப்பவர்களை பார்க்கத்தான் போகிறீர்கள் என நம்பிக்கையோடு சொல்கிறார், குர்விந்தர்.