கோடையின் ஆரம்பமே கொளுத்தும் வெயிலுடன் தான் தொடங்கி இருக்கிறது. இதில், இன்னமும் கத்தரி வெயில் என்று சொல்லப்படக்கூடிய அக்னி நட்சத்திர காலம் வரவில்லை. அதில் என்ன கதியாகப் போகிறோமோ? அது தான் இப்போதைக்கு தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவலையாகி இருக்கிறது. மார்ச் மாதம் முடியப்போகிறது. இப்போதே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
நேற்று முன் தினம் 7 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்திருந்த நிலையில், நேற்று 5 மாவட்டங்களில் சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக, ஈரோட்டில் 103 புள்ளி 28 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தியில் 103 புள்ளி 10 டிகிரியும், மதுரையில் 102 புள்ளி 20 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 100 புள்ளி 76 டிகிரியும் வெயில் பதிவாகியுளது . திருச்சியில் 100 புள்ளி 22 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 100, 101 என்ற பாரன்ஹீட் வெயில் அடித்து வந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 103 புள்ளி 28 டிகிரியை வெயில் தொட்டுள்ளது.
சமாளிக்கலாம் இப்படி…
Ø வெயிலைச் சமாளிக்க மக்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தாலும் அனலடிக்கும் சூரியனின் தாக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்கான ஒரே வழி போதுமான அளவு தண்ணீர் அருந்துவது மட்டுமே. ஆகவே பொதுமக்களே! வெயிலில் வெளியில் எங்கு பயணிப்பதாக இருந்தாலும் சரி எதை மறந்தாலும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
Ø சுட்டெரிக்கும் சூரியக்கதிர்களின் நேரடித் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க குடைகள், தொப்பிகள் முதலானவற்றையும் மறவாமல் பயன்படுத்துங்கள்.
Ø வீட்டில் ஏசி வைத்திருப்போர் உடனடியாக அதை சர்வீஸ் செய்து நல்ல நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
Ø குளிர்சாதனப் பெட்டியில் எப்போதும் இளநீர், ஃப்ரெஷ் ஜூஸ், மோர், எனத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். வெறும் தண்ணீரை மட்டுமே அருந்திக் கொண்டிருக்க சலிப்பாக இருந்தால் ஒருநாளைக்கு மூன்று முறையாவது ஃப்ரெஷ் ஜூஸ் போட்டு அருந்துங்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு அருந்தத் தாருங்கள்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட ஆபத்தில்லாத வழிமுறைகள் என இவற்றைச் சொல்லலாம்.