இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழும் ஒரு காஸ்மோபாலிடன் நகரம் தான் பெங்களூரூ. இந்நிலையில் அண்மையில் வெளியான ஒரு ஆய்வின்படி பெங்களூரு நகரத்தில் மொத்தம் 60 முழுமையாகச் செயல்படும் மேம்பாலங்கள் இருந்தபோதிலும், அங்கு போக்குவரத்துச் சிக்கல்களால் சாலைப் பயன்பாட்டுக்காக சுமார் 19,725 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கேற்றவாறு உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் உருவாக்கப்படவில்லை என்று தொடர்ந்து உலக நாடுகள் சில விமர்சித்து வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் எனில் மருத்துவமனை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து ஆகியவை இதில் அடங்கும்.
இந்த லிஸ்ட்டில் முக்கியமானதுதான் சாலை போக்குவரத்து. அவசரத்திற்கு மருத்தவமனைக்கு போக வேண்டும் என்றால் கூட சாலை நன்றாக இருந்தால்தான் உயிரை காப்பாற்ற முடியும். ஆனால் இந்தியாவை பொறுத்த அளவில் சாலைகளின் தரத்தை இன்னமும் சிறப்பாக மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சாலை வசதியை விரிவாக்கம் செய்ய வேண்டியது இருக்கிறது.
போக்குவரத்து தாமதம், அதனால் ஏற்படும் நெரிசல், சிக்னல்கள் நிறுத்தம் போன்ற பல பிரச்சனைகளால் எரிபொருள் இழப்பு மற்றும் அது தொடர்புடைய காரணிகளால் பெங்களூரு ஆண்டுக்கு 19,725 கோடி இழப்பை சந்திக்கிறது என்று பிரபல போக்குவரத்து மற்றும் இயக்கவியல் நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.
பல மாநில அரசுகளுக்கும் மற்றும் அதன் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் சிட்டிகளின் ஆலோசகராகவும் உள்ள ஸ்ரீஹரி தற்போது, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் போக்குவரத்து மேலாண்மை, சாலைத் திட்டமிடல், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது.
நகரத்தில் முழுமையாக செயல்படும் 60 மேம்பாலங்கள் இருந்தபோதிலும், தாமதம், கூட்ட நெரிசல், சிக்னல்களில் நிறுத்தம், வேகமாக நகரும் வாகனங்களின் குறுக்கீடு, எரிபொருள் இழப்பு, பயணிகளின் நேரம் போன்ற காரணங்களால் ஐடி ஹப் சாலைப் பயனாளர்களுக்கு 19,725 கோடி இழப்பு ஏற்படுவதாக ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர்.