டச்சு நாட்டு யூடியூபரைத் தாக்கிய பெங்களூரு வியாபாரி!

டச்சு நாட்டு யூடியூபரைத் தாக்கிய பெங்களூரு வியாபாரி!

கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சிட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள சுல்தான் பேட்டை, சோர் பஜார் பகுதியில் வணிகர் ஒருவரால் டச்சு யூடியூபர் ஒருவர் தாக்கப்பட்டார். இந்தக் காட்சியை பதிவாக்கிய அந்த யூடியூபர் தன்னுடைய வீடியோ சேமிப்பில் வைத்திருந்திருக்கிறார். மேட்லி ரோவர் எனும் அந்த யூடியூபர் தனது ஈடியோ கிளிப்பை இரண்டு நாட்களுக்கு முன் ஞாயிறு அன்று இணையத்தில் பதிவேற்றியதில் இருந்து தற்போது வரையிலும் அந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது .

சுல்தான் பேட்டையில் உள்ள உணவகங்கள், கடைகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை ரோவர் பதிவு செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூருவுக்கு சுற்றுப்பயணம் வந்த மேட்லி ரோவர், சோர் பஜார் பகுதியை வீடியோ பதிவாக்கிக் கொண்டிருந்த போது அப்பகுதியில் இருந்த துணி வியாபாரி ஒருவருக்கு அவரது செயல் பிடிக்கவில்லை. எனவே அவர் மேட்லியிடம் உடனடியாக அங்கு எடுக்கப்பட்ட வீடியோ பதிவை உடனடியாக நீக்கச் சொல்லி விவாதித்திருக்கிறார். ஆனால், மேட்லி வீடியோவை நீக்காமல் அதற்குப் பதிலாக அந்த துணி வியாபாரியிடம் பேசி அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். வியாபாரி சமாதானமாகவில்லை. மேட்லியின் முயற்சி வீணானதோடு வியாபாரியால் தாக்குதலுக்கும் உள்ளானார். அத்துடன் அந்த வியாபாரி மேட்லியை உடனடியாக அந்த இடடத்தில் இருந்து வெளியேறும்படியும் கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

இந்த விஷயத்தைப் பற்றி மேட்லி எழுதிய பதிவில், தான் பெங்களூரு சுல்தான்பேட்டை, சோர் பஜாரில் பயணம் மேற்கொண்டிருந்த போது அங்கு தெருவோரக் கடைகளில் ஸ்ட்ரீட் புட் சாப்பிட்ட பிறகு லோக்கல் கடைகளில் ஒரு பட்டன் வைத்த சட்டைக்காக பேரம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது வெளிநாட்டவர்களுக்கு எப்போதும் சுவாரஸ்யம் தரத்தக்கதான அந்தப் பகுதியை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து வீடியோ பதிவாக்கும் எனது முயற்சி தவறாக முடிந்தது. நான் அங்கிருந்த கோபமான துணி வியாபாரி ஒருவரால் தாக்கப்பட்டேன்.

- என்று குறிப்பிட்டிருந்தார்.

பல இணையவாசிகள், குறிப்பாக பெங்களூருவாசிகள், இந்த தாக்குதலை விமர்சித்து, ரோவரிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த வீடியோ ட்வீட் செய்யப்பட்டு,பெங்களூரு சிட்டி போலீசாரை குறி வைத்தது. திங்கள்கிழமை காலை, DCP (மேற்கு) லக்ஷ்மன் நிம்பர்கி, வெளிநாட்டவரான மேட்லியைத் தாக்கிய துணி வியாபாரி மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து குறைந்த தேடுதலிலேயே அதிக சிரமமின்றி, சோர் பஜாரில் துணிகளை விற்றுக் கொண்டிருந்த அந்த நபரை போலீசார் விரைவில் கண்டடைந்தனர். நேற்று, திங்களன்று சட்டப் பிரிவு 92 (தெருவோரக் குற்றங்கள் மற்றும் தொல்லைகளுக்கான தண்டனை) ன் கீழ் கர்நாடக போலீஸ் அந்த நபரைக் கைது செய்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் பழைய குட்டடஹள்ளியைச் சேர்ந்த 58 வயது நவாப் ஹயாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹயாத் சோர் பஜாரில் துணிகளை விற்பதோடு அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோரிக்ஷாவும் ஓட்டுகிறார். ஹயாத் தனது அறிக்கையில், உரிமம் இல்லாததால், வீடியோ தனக்கும் மற்ற வர்த்தகர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தான் கருதுவதாகக் கூறினார். எனவே, அந்த காட்சிகளை நீக்குமாறு வெளிநாட்டவரிடம் அவர் கூறியிருந்தார்.

ஆனால், அந்த டச்சுக்காரர் மேட்லி ரோவர், ஹயாத்தின் வேண்டுகோளைக் கண்டுகொள்ளாமல் மேலும் வீடியோ பதிவில் ஈடுபட்டதால், ஹயாத் நவாப் அவரைத் தாக்கினார் என்று போலீசார் தெரிவித்தனர்.

நவாப் பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com