பெர்மான்ஸ் ரிப்போர்ட்: முன்னிலையில் தி.முக. எம்.பி.க்கள்!

பெர்மான்ஸ் ரிப்போர்ட்: முன்னிலையில் தி.முக. எம்.பி.க்கள்!
Published on

கடந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. சமூக ஆய்வு அமைப்பான பிஆர்எஸ் இந்தியா இதை வெளியிட்டிருக்கிறது. பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களைவை எம்.பி.க்களின் செயல்பாடுகளுக்கேற்ப புள்ளிகள் தரப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் தமிழ்நாட்டிலிருந்து 18 எம்.பி.க்கள் இடம்பெறுகிறார்கள். ஆறு ஆண்டு பணிக்கு பின்சுழற்சி முறையில் ஓய்வு பெறுவதுண்டு. ஆறு மாதங்களுக்கு முன்னர் புதிதாக ஆறு எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களது செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, ‘பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன்’ அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

வருகைப் பதிவேடும், புதிய விவாதங்களை முன்னெடுக்கும் தன்மையும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எத்தனை பேர், எத்தனை முறை தனிநபர் மசோதாவை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும் புள்ளிகள் தரப்படுகின்றன.

பெரும்பாலான எம்.பி.க்கள் தம்முடைய கட்சி முன்வைக்கும் கருத்துகளை முன்மொழிவது, ஆதரித்துப் பேசுவது வழக்கம். அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, சுய முயற்சியாக முக்கியமான பிரச்னைகளை விவாதத்திற்குக் கொண்டு வந்த எம்.பி.க்களுக்கு அதிக புள்ளிகள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. எம்.பி.யான டாக்டர் கனிமொழி சோமு, மற்றவர்களை விட, முன்னணியில் இருக்கிறார். கடந்த ஓராண்டில் மட்டும் 125 கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பியிருக்கிறார். இவருக்கு 136 புள்ளிகள் தரப்பட்டுள்ளன. அதையடுத்து தி.மு.க.வின் வழக்கறிஞர் வில்சனுக்கு இரண்டாமிடம் கிடைத்துள்ளது. இவர் 111 கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அ.தி.மு.கவை பொறுத்தவரை விஜய்குமார் 514 புள்ளிகள் பெற்றிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக நவநீதகிருஷ்ணனுக்கு 120 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் துணை சபாநாயகரான தம்பிதுரை அதிக விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார். சென்ற முறை பல நேரம் மாநிலங்களவைக்கு வராத பா.ம.க.வின் அன்புமணியிடம் இம்முறை நல்ல மாற்றம் தெரிகிறது. அடுத்து த.மா.க.வின் ஜி.கே.வாசனும் பல விவாதங்களில் பங்கேற்றதும் ஆச்சர்யம்தான்.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மிகக் குறைவான கேள்விகளை எழுப்பியவராக ப.சிதம்பரம் தெரிகிறார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.தர்மர், என்.சந்திரசேகரன், சி.வி.சண்முகம் ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. வருகைப் பதிவேட்டை பொறுத்தவரை திருச்சி சிவா அதிக நாட்கள் வருகை தந்திருக்கிறார். மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பாதி நேரம் மட்டுமே விவாதங்களுக்கு வந்திருக்கிறார்கள்.

இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து வெளியிட்டால் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு உதவியாக இருக்கும். இவர்களுக்கு மீண்டும் இடம் தருவதா? வேண்டாமா என்கிற முடிவை எடுக்க இது உதவியாக இருக்கும். எத்தனை பேர், எத்தனை முறை தொகுதி பக்கம் வந்தார்கள் என்பதையும் கணக்கில் கொண்டால் ஆய்வு முடிவுகள் இன்னும் சுவராசியமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com