இந்திய ஐடி ஊழியர்களே உங்கள் எதிர்காலம் குறித்து உஷார்!
உலகெங்கிலும் உள்ள ஐடி துறையில் இந்த ஆண்டு ரிசெஷன் அச்சம் இருந்தபோதிலும், இந்திய ஐ.டி நிறுவனங்கள் நல்ல முன்னேற்றத்தையும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தையும் போட்டுவந்தது.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் வங்கிகள் சில திவாலானதும், இந்திய ஐ.டி நிறுவனங்களில் திடீரென சில மாற்றங்கள் ஏற்படத் துவங்கியுள்ளது. உதாரணத்திற்கு இன்போசிஸ் தலைவர் ராஜினாமா செய்துவிட்டு டெக் மகேந்திராவுற்கு மாறினார். டி.சி.எஸ் நிறுவனத் தலைவர் கிருதிவாசன் முதன்மைத் தலைமை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
மேலும் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆக்சென்சர் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்த 18 மாதங்களில் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதில் குறிப்பாக அதிகப்படியான உயரதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம் என அந்நிறுவன CEO ஜூலி ஸ்வீட் தெரிவித்தார்.
Accenture நிறுவனம் எடுத்த முடிவின் தாக்கம் இந்திய நிறுவனங்களிலும் பிரதிபலிக்கும் என பல வல்லுனர்கள் கூறிவரும் வேளையில், பல முக்கியத் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனால் புதிய நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்திய ஐ.டி நிறுவனங்களில் வருவாய் மற்றும் வர்த்தகம் குறித்த பயம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், புதிய ஆட்சேர்ப்பு அளவு பாதியாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்பு விகிதம் அதிரடியாக பாதிக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில் ஒட்டுமொத்த ஐ.டி நிறுவனங்களின் ஆட்சேர்ப்பு விகிதமானது, முந்தைய நிதியாண்டை விட 40 முதல் 50 சதவீதம் வரை குறையும் வாய்ப்புள்ளதாக Team Lease நிறுவனம் கணித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பணிநீக்கும் அபாயம் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2023-ம் நிதியாண்டில் சுமார் 2,80,000 ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் பணியில் சேர்த்துள்ளது நம் நாடு. இது கடந்த சில காலாண்டுகளை விட மிகவும் குறைந்த ஆட்சேற்பு விகிதம் ஆகும்.
ஐடி நிறுவனங்கள் பொதுவாகவே அவர்களின் வளர்ச்சி அளவுகளை வைத்துதான் ஊழியர்களை சேர்ப்பதா, வேண்டாமா என்று முடிவெடுப்பார்கள். எனவே தற்போது இருக்கும் நிலை அடுத்த சில மாதங்களில் மாறுவதற்கும் வாய்ப்புள்ளது. நிறுவனங்களின் வருவாய் சதவீதம் அதிகமாக இருந்தால்தான் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அவர்களின் வருவாய் அதிகரிக்க அவர்களுக்கான டிமாண்ட் போதிய அளவு இருக்க வேண்டும். இது சமநிலையாக இருந்தால் மட்டுமே ஐ.டி ஊழியர்களின் வேலை பறிபோகாமலும், புதிய ஆட்சேர்ப்பு விகிதம் சரியான விதத்திலும் அமையும்.
Accenture நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு, ஏன் அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றால், என்னதான் அவர்கள் இந்திய நிறுவனமாக இல்லாவிட்டாலும், இந்தியாவிலேயே டிசிஎஸ் நிறுவனத்தை விட மிகப்பெரிய ஐ.டி சேவைகளை வழங்கிவரும் நிறுவனமாக இருக்கிறார்கள்.
இதன் காரணமாகவே அவர்களுடைய அறிவிப்பு, மற்ற ஐடி சேவை நிறுவனங்களிலும் பணி நீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.