தஞ்சை மாவட்டம், திருவையாறில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடைபெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 176வது ஆண்டு பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தில் கலந்து கொண்டு தொடங்கி வைத்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, ‘பாரத நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீராமபிரான் திகழ்கிறார்’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விழாவில் அவர் மேலும் பேசுகையில், “இந்த இடத்தில்தான் தியாகராஜ சுவாமிகள் ராமபிரானை மனதில் கொண்டு ஆயிரக்கணக்கான கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். அதனால்தான் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஸ்ரீராமன் இடம் பெற்றுள்ளார். ஸ்ரீராமனால்தான் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்கள் இணைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு சர்வாதிகாரிகளாலும் இந்த நாடு உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், தியாகராஜ சுவாமிகள் போன்ற கவிகளாலும்தான் இந்நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சனாதனமே பாரதத்தை தோற்றுவித்தது. அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சியே நம் பாரதத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக உள்ளது. அதனால் பக்திதான் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஊடகமாகத் திகழ்கிறது.
பக்தி மூலம்தான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளைப் பாடி இறைவனைத் தொழுதார். இவரைப் போன்ற பக்தர்களால்தான் இந்த பாரதம் தோற்றுவிக்கப்பட்டது. ஆகவேதான், நம் பாரத நாடு ஆன்மிக உணர்வுடன் கூடிய ஒரு புண்ணிய பூமியாகத் திகழ்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகத்துக்கே தலைமை தாங்கக்கூடிய வல்லரசாகத் திகழ்ந்த நமது பாரத பூமி, பிறகு வந்த காலனி ஆதிக்கத்தால் பெரும் பின்னடைவு கண்டது. இன்னும் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் நமது பாரத பூமி மீண்டும் உலகத்துக்கே தலைமை தாங்கும் பெருமையைப் பெறும்” என்று பேசினார்.
இந்த விழா, ஸ்ரீ தியாக பிரம்ம மஹோத்ஸவ சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சபா செயலர் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் வரவேற்று பேசினார். நிறைவாக, சபா செயலர் ஸ்ரீ முஷ்ணம் வி.ராஜா ராவ் நன்றி கூறினார்.