77வது சுதந்திர தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் (X) வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர், “அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக இருக்க வேண்டும்” என்றார்.
பாரத் ஜடோ யாத்திரையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் அதில் பகிர்ந்து கொண்டார். ‘145 நாட்கள் கடலோரப் பயணத்துக்குப் பிறகு பனி படந்த காஷ்மீரைச் சென்றடைந்ததாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு 145 நாட்கள் நான் நடைப்பயணம் மேற்கொண்டேன். கடலோரப் பகுதியில் பயணத்தை தொடங்கி, வெப்பம், தூசு, மழை என்று பாராமல் நடந்து சென்று வனப்பகுதிகள், நகரங்கள், மலைப்பகுதிகள் வழியாக பனிபடர்ந்த காஷ்மீரைச் சென்று சேர்ந்தேன்’ என்றார்.
‘யாத்திரையின்போது பல வலிகளை எதிர்கொண்டாலும் ஊக்கம்தான் எனக்கு வலிமையை கொடுத்தது. அதனால்தான் யாத்திரையை விடாமல் தொடர்ந்தேன். நடைப்பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே எனக்கு முழங்கால் வலி வந்துவிட்டது. பிஸியோதெரபி பயிற்சி மேற்கொள்ளாததால் இந்த வலி ஏற்பட்டது. எனினும் சில நாட்கள் நடந்த பின் பிஸியோதெரபி மருத்துவரும் எங்கள் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கினார். ஆனாலும், வலி போகவில்லை.
நடைப்பயணத்தை கைவிட்டு விடலாமா என்று கூட நினைத்தேன். அப்போதுதான் சிலர் வந்து என்னை ஊக்கப்படுத்தினர். நான் பயணத்தை தொடர்ந்தேன். பின்னர் அந்த யாத்திரையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மக்கள் பலரும் எனது யாத்திரையில் கலந்துகொண்டார்கள். வலி தொடர்ந்தாலும் மனம் தளராமல் பயணத்தைத் தொடர்ந்தேன். பல்வேறு மக்களிடம் பேசினேன். பலதரப்பட்ட மக்கள் சொன்ன விஷயங்களை காதுகொடுத்து கேட்டேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.