

அமெரிக்காவில் வேலை செய்து வரும் இந்தியர்களின் திறமை நமது நாட்டிற்கு தேவை எனவும், அனைவரும் இங்கு திரும்பி வருமாறும் சோகோ நிறுவன தலைவர் ஸ்ரீதர் வேம்பு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2025-ம் ஆண்டு 2-வது முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, அவர் கொண்டுவந்த பல்வேறு விதிமுறைகளால் உலக நாடுகள் பெருமளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அவர் சமீபத்தில் கொண்டு வந்த H-1B விசா சீர்திருத்தத்தால் பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகளில் வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்காவில் பணிபுரிய H-1B விசா பெறுபவர்களில் 71% பேர் இந்தியர்கள். அதற்கடுத்தபடியாக சீனர்கள் இருக்கின்றனர்.
டிரம்ப்பில் இந்த முடிவானது அமெரிக்காவுக்கு வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை மறைமுகமாக தடுக்கும் நடவடிக்கை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிகிற இந்தியர்கள் தாயகத்திற்கு திரும்புமாறு சோகோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த கடிதத்தில், “37 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள். நீங்கள் மகத்தான வெற்றியை அடைந்தீர்கள். அமெரிக்கா நமக்கு நல்லதையே செய்தது. அதற்காக நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் - நன்றியுணர்வே நமது பாரத வழி.
ஆயினும், இன்று கணிசமான எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் - ஒருவேளை பெரும்பான்மையினர் இல்லாவிட்டாலும், அதற்கு வெகு தொலைவில் இல்லாதவர்கள் - இந்தியர்கள் அமெரிக்க வேலைகளைப் 'பறித்துக்கொள்கிறார்கள்' என்றும், அமெரிக்காவில் நமது வெற்றி நியாயமற்ற முறையில் சம்பாதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள்.
அடுத்த தேர்தல் இதைச் சரிசெய்துவிடும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் உங்கள் தேர்வு, நமது பாரத நாகரிகத்தை வெறுப்பவர்களுக்கும், நாகரிகத்தையே வெறுப்பவர்களுக்கும் இடையே இருக்கும். அதுதான் 'தீவிர வலதுசாரி' மற்றும் 'விழிப்புணர்வு இடதுசாரி' மோதல். அந்த மோதலுக்கு நீங்கள் வெறும் பார்வையாளர்களே.
இதற்கிடையில், தற்போதும் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கப்போகும் ஒரு விஷயம் உண்டு: இந்திய நாட்டின் அதிர்ஷ்டத்தால் தான் உலகெங்கிலும் இந்தியர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. இந்தியா ஏழை நாடாகவே இருக்கும்பட்சத்தில் சிலர் பரிதாபத்துடனும், சிலர் இகழ்ச்சியுடனும் அறநெறி போதைகளை வழங்குவார்கள். ஆனால் இவ்விரண்டும் மரியாதையும் ஒன்று அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய உலகில் மரியாதை, செழிப்பு மற்றும் பாதுகாப்புடன் சேர்ந்து, ஒரே ஒரு மூலத்திலிருந்து வருகிறது: அது ஒரு தேசத்தின் தொழில்நுட்பத் திறமை. அந்தத் திறமையை அடைவதற்குத் தேவையான அறிவுத்திறனை இந்தியா உருவாக்குகிறது, ஆனால் வருந்தத்தக்க வகையில், அந்தத் திறமையில் பெரும்பகுதியை, குறிப்பாக அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்துவிட்டோம்.
எனவே இந்தியாவில் அந்த திறமையை நாம் வளர்க்க வேண்டும். இதை பற்றி சிந்திப்பது பலருக்கு கடினமாக இருந்தாலும், உங்களது திறமை நமது நாட்டிற்கு தேவை. எனவே தயவு செய்து தாயகத்திற்கு திரும்பி வாருங்கள். நமது நாட்டை செழிப்பான பாதையில் கொண்டு செல்ல, உங்களுடைய தொழில்நுட்ப திறமையை நாட்டிற்கு அளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உலகளவில் வெற்றி பெற்ற சோகோ நிறுவனத்தின் (Zoho Corporation) தலைவர் ஸ்ரீதர் வேம்பு இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில்முனைவோரில் ஒருவர். தமிழரான இவர் சென்னை ஐஐடியிலும் மேற்படிப்பை அமெரிக்காவிலும் படித்து Zoho நிறுவனத்தை 1996-ல் துவங்கி இன்றும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
குறிப்பாக வெளிநாட்டு முதலீடு இல்லாமல் இந்தியாவில் இருந்து உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனத்தை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு. மேலும் கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை முறையை வாழும் இவர் இந்திய திறமைகளை உள்ளூரிலேயே வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பெரிய நகரங்களுக்கு வெளியேயும் ஐடி வளர்ச்சி வேண்டும் என்று கருதி கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வப்போது அரசியல் கருத்துகளையும் கூறி வரும் இவர் தற்போது இந்தியா உருவாக்கும் அறிவுத்திறனின் பெரும்பகுதியை வருந்தத்தக்க வகையில் அமெரிக்காவிற்கு நாம் ஏற்றுமதி செய்துவிட்டோம். இந்தியாவில் அந்தத் திறமையை நாம் வளர்க்கும்போது தேசத்தின் பொருளாதாரம் உயர்ந்து நலன் காக்கப்படும் என்று இளைஞர்களுக்கு அவர் கூறியுள்ள அறிவுரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.