குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வெற்றிபெற்று, தொடர்ந்து 7-வது முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து அங்கு முதல்வராக இருந்த பூபேந்திர படேல் இன்று மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பூபேந்திர படேல் தனது காட்லோதியா தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆமீ யாஜ்னிக்கை 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் பாஜகவில் வெற்றி பெற்றுள்ள எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டார்.
இதையடுத்து மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாடீல் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பூபேந்திர படேல் ஆளுநர் மாளிகைக்கு சென்று, ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கு உரிமை கோரினார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து புதிய முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கும் விழா காந்திநகரில் அரசு புதிய தலைமைச்செயலகம் அருகே அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்தில் இன்று கோலாகலமாக நடக்கிறது.
இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிற பதவி ஏற்பு விழாவில், பூபேந்திர படேலுக்கு ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத் பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி, மற்றும் மத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி காந்தி நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.