

2018ம் ஆண்டில் தங்கப் பத்திரங்களை வாங்கியவர்களா நீங்கள்..? அப்போ நீங்க இனி சாதாரண ஆள் கிடையாது. லட்சாதிபதி.. என்ன புரியலையா.?
ஆம் 2018 நவம்பரில் வெளியிட்ட தங்க பத்திரங்களை இன்று முதல் திரும்ப கொடுத்து பணமாக்கிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அறிவித்துள்ளது.இதற்கும் லட்சாதிபதிக்கும் என்ன சம்பந்தம் என்று தானே யோசிக்கிறீங்க..?
இறையாண்மை தங்கப் பத்திரம் (Sovereign Gold Bond - SGB) என்பது தங்கத்தை நேரடியாக நகை அல்லது தங்க கட்டி வாங்காமல், அரசாங்கத்தின் பாதுகாப்புடன் “காகித/டிஜிட்டல் தங்கமாக” முதலீடு செய்யும் திட்டம். இதை இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.இத்திட்டத்திற்கு இந்திய அரசின் ஆதரவு இருப்பதால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.குறிப்பாக தங்கத்தை கடைகளுக்கு சென்று சேமிக்க வேண்டிய அவசியமில்லை திருட்டு, சேமிப்பு, தூய்மை போன்ற கவலை இல்லை.
வரிச்சலுகை மற்றும் 8 ஆண்டுகள் முடிந்து பெறும் முதிர்வுத் தொகைமீது வரி விலக்கு உண்டு எனும் பல சிறப்பு அம்சங்கள் இருப்பதால் அன்று இந்த தங்கப் பத்திரங்களில் தங்கள் சேமிப்பை மூலதனமாக போட்டவர்கள் இன்று பல மடங்கு லாபம் பார்க்கும் அதிர்ஷ்டசாலிகளாகின்றனர்.
ஆம், 2018 ல் கிராம் ₹ 3133 ஆக இருந்த நிலையில் முதிர்வுக்குப் பின் ₹15,102 ஆக உயர்ந்துள்ளது. சுமார் ₹ 11,969 ரூபாய் லாபம் காணலாம். மே 8 , 11 மற்றும் 12 தேதிகளின் தங்க விலையின் சராசரி அடிப்படையில் ஆர்பிஐ இதை நிர்ணயித்துள்ளது. இதன்படி ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தவர்கள் லாபத்தினுடன் ரூபாய் 4.82 லட்சம் பெறுவார்கள்.இதனுடன் ஆண்டு வட்டியாக 2.5 சதவீதம் சேரும் என்பதும் சிறப்பு.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது முந்தைய அறிவிப்பின்படி இறையாண்மை தங்கப் பத்திரங்கள் (Sovereign Gold Bond – SGB 2018-19 Series) போன்ற தகுதியான சவரன் தங்கப் பத்திரங்களை முன்கூட்டியே மீட்டு பணமாக்கிக் கொள்ள முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதன் மீட்பு விலையாக ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததன் படி, இந்த குறிப்பிட்ட தொடருக்கான முன்கூட்டிய மீட்பு விலை ஒரு கிராமுக்கு (யூனிட்) ரூ. 15,102 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) வெளியிடும் 999 தூய்மையான தங்கத்தின் விலையானது முந்தைய மூன்று வணிக நாட்களின் சராசரி இறுதி விலையின் அடிப்படையில் இதன் மீட்பு விலை கணக்கிடப்படுகிறது என்பதால் மே 8 , 11,12 தேதிகளின் சராசரி இங்கு கணக்கெடுக்கப்படுகிறது.
தங்கப் பத்திரங்கள் வாங்கிய நாளிலிருந்து 8 ஆண்டுகள் கழித்து முதிர்ச்சியடையும். ஆனால், முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, வட்டி செலுத்தப்படும் தேதிகளில் முன்கூட்டியே திரும்ப வழங்கி பணமாக்கிக் கொள்ளலாம் என்று விதிமுறைகள் உண்டு. அதன்படி 2026 மே 13 முதல் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே தங்கள் பத்திரங்களை விற்க விரும்பினால், அதற்கான காலக்கெடு முடிவதற்குள் (வட்டி செலுத்தும் தேதிக்கு ஒரு நாளுக்கு முன்) தங்களுடைய வங்கி, தபால் அலுவலகம் அல்லது SGB முகவர்களை அணுக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் வாங்கிய பத்திரங்களை திரும்ப பெற வங்கி, தபால் நிலையம் அல்லது டீமேட் கணக்கின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியிடம் நேரடியாக வாங்கியிருந்தாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் செல்லும் என்று அறியாமலேயே தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஹேப்பி தான்..