வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள், நிரந்தர வைப்பு நிதி (FD) கணக்குகள், லாக்கர்கரில் வைக்கப்படும் பொருள்கள் ஆகியவற்றுக்கு வாரிசு நியமனம் செய்வதற்கான விதிகளைத் திருத்தியமைத்து, வங்கிச் (திருத்தம்) சட்டம், 2025 அமலுக்கு வந்துள்ளது. இதன் முக்கிய விதிமுறைகள் வரும் நவம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பை அதிகரிப்பதோடு, கிளைம் செட்டில்மெண்ட் செயல்முறையை எளிதாக்கும். புதிய மாற்றங்கள் மூலம் வங்கிப் பணிகள் இன்னும் வெளிப்படையாகவும் பாதுகாப்பாகவும் மாறும் என வங்கித் துறை நம்புகிறது.
இதற்கு முன்பு வரை ஒரு நபர் ஒரு வங்கி கணக்கில் அதிகபட்சமாக ஒருவரை மட்டுமே நாமினியாக (வாரிசுதாரராக)சேர்க்க முடியும்.
அதாவது, வங்கியில் கணக்கு தொடங்குபவர்கள், லாக்கர்களில் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பாதுகாப்பாக வைப்பவர்கள் தனக்கு ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால், அந்த பணத்துக்கும், லாக்கர்களில் உள்ள உடைமைகளுக்கும் பொறுப்பாக வாரிசுதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும்.
ஆனால் தற்போது வரவுள்ள புதிய விதிமுறைகளின் படி, இனி ஒரு கணக்கிற்கு அதிகபட்சம் நான்கு நாமினிகளை சேர்க்கலாம். உரிமை கோராமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணத்தை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பேங்க் கிளெய்ம் செட்டில்மெண்ட் (கிளைம் செட்டில்மென்ட்) செயல்முறையை எளிதாக்க, வேகமாக முடிக்க உதவும்.
அதாவது வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யவில்லையென்றால், அந்த கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகை ரிசர்வ் வங்கியின் டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு (டெப்) தானாகவே மாற்றம் செய்யப்பட்டுவிடும்.
ரிசர்வ் வங்கி தகவலின்படி, கடந்த ஜூன் மாதம் வரையிலான நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58 ஆயிரத்து 330 கோடியும், தனியார் வங்கிகளில் ரூ.8 ஆயிரத்து 673 கோடியும் உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட வங்கி கணக்குதாரர் மரணமடைந்து, அவரால் முன்மொழியப்பட்ட வாரிசுதாரர் (நாமினி) பணத்துக்கு உரிமை கோராததுதான் இதற்கு பிரதான காரணமாக கருதப்படுகிறது.
புதிய விதிமுறையின் படி, வங்கியில் கணக்கு பராமரிப்பவர்கள் மற்றும் லாக்கர் வசதியை பயன்படுத்துபவர்கள், தாங்கள் விரும்பும் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமித்து, அவர்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியையும் வங்கியில் பதிவு செய்ய வேண்டும். நான்கு பேரை நாமினிகளாக நியமிக்கும் போது ஒவ்வொரு நாமினிக்கும் உரிமைப் பங்கு அல்லது சதவீதத்தையும் அதில் குறிப்பிட வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதால், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாரிசுகளை நியமனம் செய்ய அதிக சுதந்திரம் கிடைக்கிறது. இதன் மூலம், வாரிசுதாரர் உரிமை கோருவதற்கான சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு, அவர்களுக்குரிய பணம் அல்லது பொருள்கள் சிக்கலின்றி விரைவாகக் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
இதன் மூலம் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும். புதிய விதியை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ரிசர்வ் வங்கி (RBI) அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் வெளிப்படையான சேவை கிடைக்கும்.