சீனாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய பிரச்சனை. எப்படி சமாளிப்பார் ஜி ஜின்பிங்?

சீனாவுக்கு வரப்போகும் மிகப்பெரிய பிரச்சனை. எப்படி சமாளிப்பார் ஜி ஜின்பிங்?

பொருளாதாரத்தில் டாப் இடத்தில் இருக்கும் சீனாவுக்கு தற்போது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை சீன அதிபர் ஜி ஜின்பிங் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. 

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே உலக மக்கள் தொகையில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. அந்நாட்டின் குறுகிய கால பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களின் மக்கள் தொகையும் மிகப்பெரிய காரணம் எனலாம். இருப்பினும் அந்நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றதால், அதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது. 

ஜனத்தொகையைக் கட்டுப்படுத்த, ஒரு குழந்தை பாலிசியை சீனா அமல்படுத்தியது. அதாவது ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், அரசு சலுகைகளை அவர்கள் பெற முடியாது. அரசு வேலையில் கூட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சேர முடியாது என்ற திட்டங்கள் மிகவும் கடுமையாக இருந்தது. சீனாவைப் போன்றே மற்ற சில நாடுகளிலும் ஒரு குழந்தை பாலிசி திட்டம் இருந்தாலும், இதில் சீனா கண்டிப்புடன் இருந்து வந்தது. இதனால், சீனாவின் மக்கள் தொகை குறைய ஆரம்பித்தது. 

இந்நிலையில், தொடர்ந்து மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, சில மாதங்களுக்கு முன்பு தான் இரண்டாவது இடத்திற்கு சரிந்தது. இது நல்ல விஷயம் என்பதுபோல் பிறருக்குத் தெரிந்தாலும், இதனால் சீனாவின் வருங்கால வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். அதாவது மக்கள் தொகை குறைகிறது என்றால், குழந்தை பிறப்பு குறைகிறது என அர்த்தம். எனவே வரும் காலங்களில் உழைக்கும் வயதில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறையக்கூடும். ஒரு நாட்டின் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தால், அது பொருளாதாரத்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. 

இந்த புதிய பிரச்சினையை சீனா இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் அத்தகைய சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும் விதமாக மக்கள் தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இருப்பினும், இந்த செயல்களிலும் பல்வேறு சிக்கல்களை சீன அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான சீன இளைஞர்கள் திருமணத்தின் மீது நம்பிக்கையின்றி இருக்கிறார்களாம். 

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சீனாவில் குடும்ப வன்முறை அதிகம் இருப்பதால், திருமணத்தின் மீதான நம்பிக்கையை அந்நாட்டு இளைஞர்கள் இழந்துள்ளார்கள் என சொல்லப்படுகிறது. இத்தகைய சிக்கல் மிகுந்த பிரச்சனையை ஜி ஜின்பிங் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com