
பட்டியலின வகுப்பினர் மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா, பிகார் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது. இது உச்சநீதிமன்றம் விதித்திருந்த 50 சதவீத வரம்பைவிட அதிகமானதாகும்.
பெண்கள் கல்வி மற்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை தொடர்புபடுத்தி முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்த கருத்துக்கு பேரைவக்குள்ளும் வெளியேயும் அமளி நடந்து வரும் நிலையில் இந்த திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட மசோதாவின்படி பட்டியலின வகுப்பினருக்கு 20%, ஓபிசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 18% மற்றும் 25% (முன்பு இருவருக்கும் சேர்த்து 30% ஆக இருந்தது.), பழங்குடியினருக்கு 2% இடஒதுக்கீடும் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் மகளிர்க்கு அளிக்கப்பட்டுவந்த 3% இடஒதுக்கீடு கைவிடப்பட்டுள்ளது.
இந்த திருத்த மசோதா சட்டமாகவேண்டுமானால் மாநில ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்த இடஒதுக்கீடு 75% சதவீதமாக இருக்கும்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் நிதிஷ்குமார், பேரவையில் சாதிவாரி கணக்கெடு அறிக்கையை தாக்கல் செய்த சிலமணி நேரங்களில் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை அவையில் முன்மொழிந்தார். அந்த அறிக்கையின்படி பிகாரில் உள்ள 13.1 கோடி மக்களில் 36 சதவீத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
27.1 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மீதமுள்ளவர்களில் 19.7 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், 1.7 சதவீதம் பேர் பழங்குடியினர். பொதுப்பிரிவினர் 15.5 சதவீதத்தினர். அதாவது பிகாரில் 60 சதவீதம் பேர் ஓபிசி மற்றும் இபிசி பிரிவினர்.
பட்டியலின மற்றும் பழங்குடி வகுப்பினரில் 42 சதவீதம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளதாகவும், இவற்றில் 34 சதவீதம் பேரின் மாத வருமானம் ரூ.6,000 மற்றும் அதற்கு குறைவாக இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. தொடக்கத்தில் இந்த ஆய்வு அறிக்கையை பா.ஜ.க. குறைகூறி விமர்சித்தது. நாட்டை சாதி அடிப்படையில் பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாக பிரதமர் மோடியும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால், கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதில் பா.ஜ.க. திறந்த மனதுடன் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.