சமீபகாலமாக கட்சியிலிருந்து பல தலைவர்கள் ஓட்டம்பிடித்தன் காரணமாக கட்சிக்கு புதிய தலைவர்களைத் தேடி வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
கட்சிக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டு அனுப்புமாறு கட்சியினருக்கு மாயாவதி கட்டளையிட்டுள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி பல மூத்த தலைவர்களை இழந்துவிட்டது. இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்துவிட்டனர். இதனால் கட்சியில் மூத்த தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. பாஸி, குர்மிஸ், குஷ்வாஹா உள்ளிட்ட பல்வேறு சாதி சார்ந்த அமைப்புகளுக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சரியான தலைவர்கள் இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தலைவர்கள் மீண்டும் கட்சிக்குள் வருவதாக இல்லை அல்லது மாயாவதி அவர்களை மீண்டும் சேர்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வெற்றிடத்தை நிரப்பவேண்டிய சூழ்நிலைக்கு கட்சிதள்ளப்பட்டுள்ளது. கட்சியின் பல்வேறு நிலைகளில் தலைவர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது. தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. எனவே வேறு கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்களை இங்கு இழுப்பதை தவிர வேறு வழியில்லை என்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர்.
2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில தேர்தல் நடைபெறும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் பலர் கட்சியிலிருந்து வெளியேறினர். பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் சுவாமி பிரசாத் மெளரியா 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறிய ஒரு மாதத்தில் மற்றொரு முன்னணி தலைவரான ஆர்.கே.செளதுரியும் கட்சியைவிட்டு வெளியேறினார். செளதுரி பாஸி இனத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர். உத்தரப்பிரதேசத்தில் பாசி வகுப்பினர்தான் பழங்குடியினத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளனர். அதாவது பாஸி வகுப்பினர் 16 சதவீதம் பேர் உள்ளனர். மாநிலத்தில் உள்ள தலித் மக்களில் 50 சதவீதம் பேர் ஜாட் வகுப்பினராவர். செளதுரியைத் தொடர்ந்து மற்றொரு பாசி வகுப்பைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க தலைவரான இந்திரஜித் சரோஜ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இப்படி முக்கிய தலைவர்கள் வெளியேறியதால் கட்சின் வாக்கு வங்கி சதவீதம் குறைந்துபோயுள்ளது. இது கட்சியின் மற்ற தலைவர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தலித் மற்றும் இதர பிற்படுத்த மக்களைச் சென்றடைய வேண்டுமானால் செல்வாக்கு மிக்க கட்சித் தலைவர்கள் தேவை. துரதிருஷ்டவசமாக கட்சியின் மூத்த, இரண்டாம் நிலைத்தலைவர்கள் வெளியேறிவிட்டனர். வேறு கட்சியில் சேர்ந்துவிட்டாலும் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு குறையவில்லை என்கிறார் பகுஜன் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவர்.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கடந்த 2016 அக்டோபரில் வெளியேறிய பிரிஜ்லால் காப்ரி தற்போது காங்கிரஸில் சேர்ந்து அந்த கட்சியில் தலைவராக நீடிக்கிறார். பகுஜன் கட்சியில் முன்பு தலைவர்களாக இருந்த தாகுர் ஜெய்வீர் சிங் மற்றும் எஸ்.பி. சிங் பாகெல் இருவரும் பா.ஜ.க. அரசில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சியில் ஒரு காலத்தில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்த பிரிஜேஷ் பதக், தற்போது பா.ஜ.க. அரசில் துணை முதல்வராக இருக்கிறார்.
பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களில் பத்து அல்லது பன்னிரெண்டு பேர் யோகி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த முன்னாள் எம்.பி. நரேந்திர காஷ்யப் இப்போது பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார். பகுஜன் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவராக இருந்தவர்களில் ஒருவரான சதிஷ் சந்திர மிஸ்ராவை கடந்த சில மாதங்களாக காணவில்லை. அவரது தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை.
இந்த சூழலில் தான் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களைத் தேடி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் மாயாவதிக்கு பிறகு கட்சியை வழிநடத்துபவர்கள் யார் என்பதும் புரியாத புதிராக உள்ளது.