முதலமைச்சரைவிட அதிக சொத்துகள் வைத்துள்ள துணை முதல்வர் யார் தெரியுமா?

முதலமைச்சரைவிட அதிக சொத்துகள் வைத்துள்ள துணை முதல்வர் யார் தெரியுமா?
Updated on

பிகார் முதல்வர் நிதிஷ்குமாரைவிட துணை முதல்வரான தேஜஸ்வி யாதவுக்கு அதிக சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

பிகார் மாநிலத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் கேபினட் அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தங்களுடைய சொத்து மதிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.16.84 லட்சமாகவும், அசையா சொத்துக்கள் ரூ.1.48 கோடியாகவும் உள்ளது. புதுதில்லி துவாரகாவில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் முதல்வர் நிதிஷ்குமாருக்கு சொந்தமாக ஒரு பிளாட் உள்ளது. மேலும் அவரிடம் ரொக்க கையிருப்பாக ரூ.22,552 உள்ளதும் வங்கியில் ரூ.49,202 டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும் அவரிடம் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு எகோ ஸ்போர்ட் காரும், ரூ.1.28 லட்சம் மதிப்பில் இரண்டு தங்க மோதிரங்கள், ஒரு வெள்ளி மோதிரங்கள், கால்நடைகள்  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nitish kumar with tejashwi yadav
Nitish kumar with tejashwi yadavthedailyguardian.com

துணை முதல்வரான தேஜஸ்வி யாதவுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் பாதி அவரது மனைவிக்கு சொந்தமானது. வங்கிக்கணக்கில் ரூ.53 லட்சம் மற்றும் தாய் ராப்ரி தேவியுடன் கூட்டாக ரூ.39 லட்சம் வங்கியில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவை தவிர ரூ. 5 லட்சம் மதிப்புக்கு பங்குகள் உள்ளன. தம்மிடம் 200 கிராம் தங்கமும், மனைவியிடம் 480 கிராம் தங்கமும் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். மகள் காத்யாயினி பெயரில் 200 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்கள் இருப்பதாகவும், குடும்பத்தாருடன் இணைந்து ஐந்து பிளாட்டுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வியின் சகோதரரும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு சொந்தமாக 2 கார்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம. தவிர ரூ.15 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் தவிர பல்வேறு அமைச்சர்களும் தங்கள் சொத்து மதிப்புகளை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலான அமைச்சர்களின் சொத்துக்களும் நிதிஷ்குமாரின் சொத்துக்கைவிட அதிகமாகவே உள்ளது.

-------------

logo
Kalki Online
kalkionline.com