பீகாரில் கல்வித்துறை அலுவலகங்களுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டுகள் அணிந்துவர மாநில அரசு தடைவிதித்துள்ளது. அவ்வாறு ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வருவது கலாசாரத்திற்கு முற்றிலும் முரண்பாடானது என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “கல்வித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் அலுவலகங்களுக்கு ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வருவதாகத் தெரியவந்துள்ளது. இது நமது கலாசாரத்துக்கு முற்றிலும் முரணானதாகும்.எனவே இனி கல்வித்துறை அலுவலகத்துக்கு பணிபுரிய வரும் அதிகாரிகளும் ஊழியர்களும் வழக்கமான பாரம்பரிய உடை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநில கல்வி அமைச்சர் சந்திரசேகரிடம் கருத்து கேட்க ஊடகங்கள் பலமுறை தொடர்பு கொண்டு எந்த பலனும் இல்லை. ஆனாலும், கடந்த ஏப்ரல் மாதம் சரண் மாவட்ட நீதிமன்றம் அரசு அலுவலகங்களுக்கு பணிபுரிய வரும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து வர தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பீகார் தலைமைச் செயலக ஊழியர்கள் ஜீனஸ், டீ ஷர்ட் போன்றவை அணிந்து வருவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே தடைவிதிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் எளிமையான செளகரியமான சாதாரண உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.