

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்ற (WEF 2026) கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆற்றிய உரை, இப்போது உலகெங்கும் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது. பில்கேட்ஸ் வெள்ளைக் காலர் வேலைகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என்று சர்வதேச நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தார். செயற்கை நுண்ணறிவு என்பது வெறும் தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, அது உலக வேலைவாய்ப்பு சந்தையையே புரட்டிப்போடப்போகும் ஒரு சுனாமி என்கிறார்.
அடுத்து வர இருக்கும் 5 ஆண்டுகள் உலக நாடுகளுக்கு மிகவும் முக்கியமானவை. ஏஐ தொழில்நுட்பம் என்பது இதுவரை மக்களுக்கு உதவும் ஒரு முன்னோடி தொழில்நுட்பமாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் , தற்போது இந்த தொழில்நுட்பம் அதிகளவில் மேம்பட்டு உள்ளது. இதன் தாக்கம் ஒவ்வொரு துறையிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த உள்ளது. தற்போது ஏஐ அதிவேகமாக நுட்பத்தில் முன்னேறி வருகிறது. அடுத்து வரும் 4 முதல் 5 ஆண்டுகளில் ஏஐ -யின் அதிகப்படியான தாக்கம் மக்களின் கண்களுக்கு தெளிவாக புலப்படும். இதனால் அதிகம் பாதிக்கப்பட இருப்பது , ஒயிட் காலர் வேலைகளை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் மென்பொருள் வல்லுநர்கள் தான்.
வேலைவாய்ப்பினை பறிக்கும் ஏஐ:
இதுவரை வேலைவாய்ப்புகளில் ஏஐ -யின் தாக்கம் குறைவாகவே இருந்தது. இந்த நிலைமை நெடுங்காலம் நீடிக்க முடியாது.
முந்தைய தொழில்நுட்ப புரட்சிகளை காட்டிலும் ஏஐ தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. வாடிக்கையாளர் சேவை , கணக்கு சரிபார்ப்பு, சட்ட ஆவணங்களை ஆய்வு செய்தல், போன்ற அறிவுசார் பணிகளில் ஏஐ ஏற்கனவே மனிதர்களை விட வேகமாகச் செயல்படத் தொடங்கிவிட்டது.
மென்பொருள் துறையில் ஏஐ தனது உற்பத்தி திறனை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது , மென்பொருள் வேலைகளில் ஏஐ தொழில்நுட்பம் சிறப்பாக தனது வேலைகளை பங்களிக்க ஆரம்பித்து, விட்டது. இதனால் , உலகம் முழுவதிலும் பல்வேறு துறைகளில் பணியிடங்கள் குறைக்கப்படுவதாக பில்கேட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசாங்கங்கள் தூங்குகின்றனவா?
பில்கேட்ஸ் தனது பெரிய கவலையாக தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், அரசாங்கங்கள் அதற்கு ஏற்றவாறு இன்னும் தயாராகவில்லை என்று தெரிவித்துள்ளார்.
I.வேலையை இழக்கும் பணியாளர்களுக்கு புதிய திறன்களை கற்றுக் கொடுக்கும் திட்டங்கள் எதுவும் அரசாங்கங்கள் வைத்துள்ளதா?
II.ஏஐ மற்றும் ரோபோக்கள் மூலம் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு அரசு ஏதேனும் சிறப்பு வரிகளை விதிக்குமா?
III. வேலைவாய்ப்புகளை இழக்கும் போது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிப்பதைத் தடுக்க என்ன வழி?
இது போன்ற கேள்விகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
இந்த வளர்ச்சி மாற்றத்தை சரியாக நிர்வகிக்கத் தவறினால், தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு சிலரிடம் மட்டுமே பணத்தைக் குவிக்கும் கருவியாக மாறிவிடும். இது சமூகச் சமத்துவமின்மையை ஒரு மோசமாக மாற்றும் என பில்கேட்ஸ் எச்சரித்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையிலான தொழில்நுட்பக் கூட்டாண்மை உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவும். இந்தியர்கள் புதிய தொழில்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்வது உலகிற்கே ஒரு முன்னுதாரணமாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார். ஏஐ புரட்சியில் இந்தியா ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும் என்று பில்கேட்ஸ் தெரிவித்தார்.