

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் மட்டும் சுமார் 13,000 மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டீ, வடை மற்றும் சோப்பு பல்பொடி உள்பட 32 வகையான பொருட்கள் வாங்குவதற்கும் சிறையில் நடத்தும் கேண்டீனுடன் விஷன் பஜார் என்ற பெயரில் சிறை கைதிகள் தயாரித்த பொருட்கள் விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது.
சிறைக் கைதிகள் சிறையின் உள்ளே விற்கப்படும் இந்தப் பொருட்களை வாங்க வேண்டுமானால் அவர்களின் கணக்கில் பணம் இருக்க வேண்டும். இதற்காக கைதிகளின் உறவினர்கள் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பி வைப்பார்கள். இது இவர்களின் கணக்குக்கு செல்லும். உணவு பொருட்கள் வாங்க வேண்டுமானால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவற்றினைப் பெறுவார்கள். ஆனால் இந்த முறையினால் கைதி களுக்குவரும் பணம் மோசடி செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.
இதையடுத்து இந்த பிரச்சினைக்குத் தீர்வாக பயோமெட்ரிக் முறையை கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறைத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் கைதிகளின் கைரேகை மற்றும் கணக்குகளை முதலில் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்வார்கள். பின்னர் அவர்களின் கைரேகைகளை மீண்டும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு கைரேகை வைத்த பிறகுதான் அவர்களின் கணக்குக்குள் செல்ல முடியும் அவர்கள் என்னென்ன பொருட்களை வாங்குகிறார்கள் என்ற பில் அவர்களுக்கு கொடுக்கப்படும். அதில் பொருட்களை வாங்கிய பிறகு எவ்வளவு தொகை மீதம் இருக்கிறது என்று இருப்பு தொகையும் காட்டப்படும் இதனை வைத்துக்கொண்டு அவர்கள் உணவுப் பொருட்களை வாங்கலாம்.
இதில் ஏ வகுப்பு கைதிகள் வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் பொருள்களை வாங்கலாம் எனவும் பி வகுப்பு கைதிகள் ரூபாய் 750 க்கு பொருட்களை வாங்கலாம் எனவும் அனுமதிக்கப்பட்டுள்ளது இந்த பயோமெட்ரிக் முறையானது, தற்போது 1,065 கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சேலம் மத்திய சிறையில் நேற்று அமல்படுத்தப்பட்டது. பொறுப்பு கண்காணிப்பாளர் வினோத் இதனை துவக்கி வைத்தார். இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில் “சிறைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்போது பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளின் கணக்கில் இருப்புத் தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை கைதிகள் தெரிந்துகொள்ள முடியும். அதன்படி சிறையில் உள்ள கேன்டீன் மூலம் இட்லி, ஊத்தாப்பம், உளுந்து வடை, முட்டை போண்டா, கோழிக்கறி கிரேவி உள்ளிட்ட 32 வகையான உணவுகள் வழங்கப்படும்.சென்னை புழல் சிறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது தற்போது சேலம் சிறையில் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றனர்.