இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மறைந்த நினைவு தினத்தையொட்டி உதகையில் பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படை தளபதி, அவரது மனைவி மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஓராண்டு நினைவு தினத்தை ஒட்டி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உதகை நகர காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதகை நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவை சூளூர் விமாநிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் வருகை புரிந்தார்.
அப்போது ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணமாக குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இந்திய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 இந்திய ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.