

மனிதர்களிடையே புதுப்புது நோய்கள் பரவுவது போலவே, பறவைகளிடையேயும் தொற்று பரவி அவை மொத்தமாக அழிவதுண்டு. அவ்வகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவகால நோய் போலப் பறவைக் காய்ச்சலும் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டும் அத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளதால், கேரள மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில், குறிப்பாக ஆலப்புழை மற்றும் கோட்டயம் மாவட்டங்களில், H5N1 (பறவைக் காய்ச்சல்) பரவி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கோழிகள் மற்றும் முட்டைகள் கொண்டு செல்வதைத் தவிர்க்கவும், எல்லையோரக் கண்காணிப்பை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தடையானது, பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நோய் மேலும் பரவாமல் தடுக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
கோழி, முட்டைகளுடன் வாத்து மற்றும் காடை இறைச்சி போன்றவையும் இந்தத் தற்காலிகத் தடையின் கீழ் வருகின்றன. ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களின் சில பகுதிகளில் கோழி மற்றும் வாத்துகள் பண்ணைகளில் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அங்குள்ள பறவைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அதன் காரணத்தை அறிய போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு (NIHSAD) மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆலப்புழாவின் நெடுமுடி, கருவட்டா உள்ளிட்ட பல்வேறு பஞ்சாயத்துகளிலும், கோட்டயத்தின் குறவிலங்காடு (Kuruppanthara), மஞ்சூரிலும் நோய் பரவலைத் தடுக்கும் விதமாகக் கால்நடை பராமரிப்புத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் முட்டை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, நோய் பரவாமல் இருக்கப் பண்ணைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பறவைகளை மொத்தமாக அழிக்கவும் (Culling) அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தத் தற்காலிகத் தடையானது இறைச்சிப் பிரியர்களுக்குச் சற்று வருத்தம் தந்தாலும், நோய் பரவும் முன் எடுக்கப்பட்ட இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வரவேற்கின்றனர்.