வர்த்தக சாம்ராஜ்ய முன்னேற்றத்தில் சற்று பின்தங்கி இருந்த ஆதித்யா பிர்லா குழுமம், தற்போது தனது இரண்டாவது பகுதி ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறது. இந்தியாவில் தங்கம் மற்றும் வைர நகைகள் வியாபாரத்துக்கு எப்போதும் மதிப்பு குறைவிருக்காது. தங்கம் மற்றும் வைரத்தின் விலை உயர்ந்தாலும் சரி, சரிந்தாலும் சரி, நகைகளின் விற்பனை மட்டும் எப்போதுமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நகை விற்பனை துறையில் ஏற்கெனவே பல முன்னணி நிறுவனங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. அந்த வகையில் டாடா குழுமம் டைட்டன் நிறுவனத்தின் மூலம் பல்வேறு பிராண்டுகளின் கீழ் டிசைனர் நகைகளை விற்பனை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், டாடா நிறுவனத்துக்கு போட்டியாக, ஆதித்யா பிர்லா குழுமம் பிராண்டட் நகைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் புதிதாக கால் பதிக்க முடிவு செய்து இருக்கிறது. இதற்காக பிர்லா குழுமம் 5000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை செய்ய திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மிகப்பெரிய முதலீட்டின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரீடைல் நகைக் கடைகளை இந்த நிறுவனம் ஆரம்பிக்க உள்ளது. ஆதித்யா பிர்லா குழுமம் புதிய நகைக் கடை வர்த்தகத்தை Novel Jewels என்ற பெயரில் ஆரம்பிக்க உள்ளது. இந்த நகைக் கடை மூலம் இந்திய மக்களுக்கு டிசைனர் அடிப்படையிலான டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உயர் தர நகைகளை விற்பனை செய்ய உள்ளது. இந்த பிராண்டட் நகை விற்பனைப் பிரிவை ஆதித்யா பிர்லா குழுமத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட உயர்மட்ட நிர்வாக குழு தேர்வு செய்த அதிகாரிகள் நிர்வாகம் செய்ய உள்ளனர். சமீபத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய பொறுப்பில் குமார் மங்களம் பிர்லாவின் மகள் மற்றும் மகன் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.