
சென்னை அரசு பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து அராஜகம் செய்த நடிகை ரஞ்சனாவை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளை செய்து வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற நடிகை ரஞ்சனா இதனை வீடியோவாக பதிவு செய்துவிட்டு பேருந்தை வழிமறித்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தன்னை ஒரு போலீஸ் என கூறி மாணவர்கள் கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்டு அனைவரையும் கதிகலங்க செய்தார். மேலும், நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கெத்து காட்டி அலப்பறை செய்தார்.
இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று காலை மாங்காடு போலீசார் ரஞ்சனாவை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது ரஞ்சனாவை 2 மகளிர் போலீசார் வண்டியில் ஏற்றினர்.
மேலும் கைது செய்ய வந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரஞ்சனா. தொடர்ந்து அவர் மீது மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.