பா.ஜ.க.வை. வீழ்த்த நிதிஷ் குமார் வைத்திருக்கும் திட்டம் என்ன தெரியுமா?

பா.ஜ.க.வை. வீழ்த்த நிதிஷ் குமார் வைத்திருக்கும் திட்டம் என்ன தெரியுமா?

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் சவாலான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து அவர் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவிலும், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை லக்னெளவிலும் சந்தித்து பேசவிருக்கிறார்.

இது தொடர்பாக பாட்னாவில் செய்தியாளர்கள் நிதிஷ்குமாரிடம், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்களா? என்று கேட்டதற்கு, “அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம், நேரம் வரும்போது நானே உங்களிடம் தெரிவிப்பேன்” என்றார்.

லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர்களில் ஒருவரும், பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடன் நிதிஷ்குமார், கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு இருவரும் லக்னெளவில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் இடம்பெறும் அணியில் சமாஜவாதி கட்சி நிச்சயம் இடம்பெறாது என்பதை அகிலேஷ் யாதவ் ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் சட்டப்பேரவைத் தொகுதியை திரிணமூல் காங்கிரசிடமிருந்து காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மம்தா பானர்ஜியும் புதிய அணியில் காங்கிரஸ் இடம்பெறுவதை விரும்பவில்லை.

ராகுல்காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதற்கு பரவலாக எதிர்ப்புக் குரல் எழுந்துள்ள போதிலும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து மூன்றாவது அணி அமைவதற்கான அறிகுறிகளே தெரியவருகின்றன.

அந்தவகையில் இதர அரசியல்கட்சித் தலைவர்களுடன் நல்லுறவு வைத்துள்ள நிதிஷ்குமார், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சவாலான பணியை கையில் எடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் தனது கூட்டணி கட்சியினரை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்தவாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும் தில்லி முதல்வருமான கெஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவரை சந்தித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நிதிஷ்குமாரின் முயற்சிகளுக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு கடினமான சூழலை சந்தித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அவசியம்தான் என்றும் அவை குறிப்பிட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒரே ஒரு எதிர்க்கட்சி வேட்பாளர்களை களத்தில் இறக்கி எதிர்க்கட்சி வோட்டுகள் சிதறாமல் வெற்றிபெறுவதுதான் நிதிஷ்குமாரின் திட்டம் எனத் தெரியவந்துள்ளது. இந்த உத்திதான் 1977 மற்றும் 1989 தேர்தலில் பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com