மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகள் தானா? ஷிண்டே போர்க்கொடி!

மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகள் தானா? ஷிண்டே போர்க்கொடி!

க்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளை ஆளுங்கட்சிக் கூட்டணியான பா.ஜ.க., சிவசேனை (ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) பகிர்ந்து கொள்வது குறித்து பேரம் நடந்து வருகிறது.

பா.ஜ.க. 26 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை 11 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்த கட்சிக்கு எவ்வளவு என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் தங்கள் கட்சிக்கு 11 தொகுதிகள். ஒதுக்கப்படுவது குறித்து சிவசேனை ஷிண்டே பிரிவு தலைவரும், முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு 13 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 6 எம்.பி.க்கள் முன்னாள் முதல்வரும், சிவசேனை மற்றொரு பிரிவின் தலைவரான உத்தவ் தாக்கரேயை ஆதரித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு குறைந்தபட்சம் 13 தொகுதிகளாக வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது.

எனினும் தேசியவாத காங்கிரஸ் பிரிவின் தலைவர் அஜித் பவார் 11 தொகுதிகள் கேட்டுப் பெற்றதாலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு 13 தொகுதிகள் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்துவருவதாலும், ஷிண்டே 11 தொகுதிகளுடன் திருப்தி அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லப்படுகிறது.

ஒருவேளை மக்களவைத் தேர்தலுக்கு 13 தொகுதிகள் கிடைக்காவிட்டால், அடுத்துவரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தருவதாக பா.ஜ.க. உறுதியளிக்கும்பட்சத்தில் தற்போதைய சூழலில் 13-க்கு பதிலாக 11 தொகுதிகளை ஏற்க ஷிண்டே தயாராக இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கணிசமான தொகுதிகள் தருவதாக பா.ஜ.க.வினர் முன்பு உறுதியளித்தனர். தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் என்று நினைத்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தி தேர்தல் சந்திப்பதாக உறுதியளிக்க வேண்டும் என்றார் சிவசேனை அமைச்சர் ஒருவர்.

மேலும் பா.ஜ.க.-சிவசேனை (ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ் (அஜித்பாவர்) கூட்டணி மீண்டும் தேர்தலின் வென்று ஆட்சியைப் பிடித்தால் ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வர் என்று பா.ஜ.க. உறுதியளிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் பொதுத் தேர்தலில் விட்டுக் கொடுத்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடநேத 2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 25 தொகுதிகளிலும், அப்போது ஒன்றாக இருந்த சிவசேனை கட்சி 23 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் பா.ஜ.க. 23 இடங்களிலும் சிவசேனை 18 இடங்களிலும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com