
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்ட்ப்பேரவை நடத்த மத்திய அரசுக்கு துணிவில்லை. ஆனால், பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் இங்கு மக்களவைத் தேர்தல் நடைபெறக்கூடும். இல்லையெனில் அதையும் நடத்தமாட்டார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இதுதொடர்பாக பூஞ்ச மாவட்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மத்தியில்ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு காஷ்மீரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும், பஞ்சாயத்துக்கு தேர்தலும் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த்து. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை.
ஜம்மு காஷ்மீரில் கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடந்த்து. நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆளுநர் ஆட்சியின் கீழ் இருக்கிறோம். 2019-க்குப் பிறகு இங்கு நிலைமை குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் தேர்தலை நடத்துவதில் ஏன் தாமதம்? மக்களின் மனநிலை அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் தேர்தலை நடத்த பா.ஜ.க. பயப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நடத்துவது காலத்தின் கட்டாயம். அதனால் அந்த தேர்தலை நடத்துவார்கள். அப்படியொரு நிர்பந்தம் இல்லையென்றால் அதைக்கூட நடத்தமாட்டார்கள் என்றார் உமர் அப்துல்லா.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை. மக்களை சந்திக்க அவர்கள் (பா.ஜ.க.வினர்) வெட்கப்படுகிறார்கள். மேலும் சமீபத்தில் நடைபெற்ற கார்கில் தேர்தலும் அவர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தேர்தலில் தேசியமாநாடு-காங்கிரஸ் கூட்டணி மொத்தம் உள்ள 26 இடங்களில் 22 இடங்களை கைப்பற்றியது. வெற்றிபெற்ற 2 சுயேச்சை வேட்பாளர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார் உமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற்று தேசியமாநாட்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்தால் தினக்கூலித் தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள். ஜம்முவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மக்கள் நலனுக்காக செயல்படவில்லை. இந்த முறை நாங்கள் வேட்பாளர்களை கவனமுடன் தேர்வு செய்வோம் என்றார் உமர் அப்துல்லா.