பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா கைது அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!

பாஜக பிரமுகர் எஸ்.ஜி.சூர்யா கைது அண்ணாமலை, வானதி சீனிவாசன் கண்டனம்!

மிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. இவர், சமீபத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஒருவரால் தூய்மைப் பணியாளர் உயிரிழந்தார் என்றும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இதுகுறித்து கள்ள மௌனம் காக்கின்றார் என்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது ட்விட்டர் பதிவின் மூலம் கூறியதாக, மதுரை சைபர் கிரைம் போலீசார் நேற்று நள்ளிரவு அவரை கைது செய்து இருக்கின்றனர். இவர் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். பிறகு அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த செய்தியை அறிந்ததும் ஏராளமான பாஜகவினர் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். மேலும், இந்த திடீர் கைதை கண்டித்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

பாஜக பிரமுகர் சூர்யா கைதானதைக் கண்டித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கதக்கது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்டுகளின் மோசமான இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியதுதான் அவர் செய்த ஒரே தவறு. விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற திமுக, எதிர்க்கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்களின் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப்போக்கு தமிழகத்தில் நிலவுகிறது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இதுபோல தொடர்ந்து பாஜக தொண்டர்களைக் கைது செய்வது ஏதேச்சதிகாரப் போக்கு. பாஜக தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல் எப்போதும் உண்மைக்காக ஒலித்துக்கொண்டிருக்கும்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

அதேபோல், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மலக்குழி மரணங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை மாற்ற முயற்சிக்காத தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனங்களுக்கு கைது என்பதன் மூலம் தனது ஆத்திரத்தை, கோபத்தைக் குறைக்கிறாரா? வளர்ந்து வருகிறோம்; சட்டப்படி சந்திப்போம்” எனப் பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com