அமலாக்கத்துறையை வைத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த நினைக்கிறது பாஜக அரசு என ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாலன்குட்டை அரசு பள்ளியில் தமிழ்நாடு நாள் தின பேரணி நடைபெற்றது. இதை அமைச்சர் முத்துசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே எஸ்.இளங்கோவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியது, மோடி தனது அரசியல் எதிரிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடவடிக்கை எடுக்கும் பணியை மட்டும் செய்து வருகிறது. இப்படி மோடி அரசு தனது விசாரணை அமைப்புகளை வைத்து மாநில அரசுகளையும், எதிர்க்கட்சிகளையும் அச்சுறுத்த பார்க்கிறது.
இது பழிவாங்கும் நடவடிக்கை, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி ஒடுக்கி விடலாம், வரக்கூடிய தேர்தலில் தோற்கடித்துவிடலாம் என்று மோடி நினைத்து வருகிறார். ஆனால் அவரது எண்ணம் தவறு.
வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். பாஜகவினர் தேர்தல் தோல்வி அடைவார்கள்.இது நாடாளுமன்றத் தேர்தலில் தெரியும். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் இறுதி, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவர்கள் சிறை செல்வார் என்று கூறினார்.