கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியதற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் இல்லையெனில் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க மகளிரணியின் தலைவர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் 15 லட்சம் ரூபாய் தருவதாக பிரதமர் தெரிவித்ததாக கூறியதையெடுத்து மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது.
பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்து அறிக்கை விடுத்துள்ளார். அதில் திருமண விழாவில் பேசிய முதல்வர், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள்.
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் திரு. நரேந்திர மோடி உறுதிமொழி தந்தார். ஆனால், ரூ. 15 கூட தரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி பேசாத ஒன்றை, அப்பட்டமான பொய்யை கொஞ்சம்கூட கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார். தேர்தல் பிரசாரத்தின்போது, "வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால், ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்" என்றுதான் பேசியிருந்தார்.
ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் வெளிநாட்டில் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு எளிதாக புரிய வைப்பதற்காக பேசியிருந்தார். ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால், மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது. ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என, முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.
முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர், அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கூட ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பத்தாண்டுகளாக தொடரும் 15 லட்ச ரூபாய் மர்மத்திற்கு இனியாவது விடை தெரிந்தால் சரி!