சாதிய அரசியலில் சறுக்கிய பா.ஜ.க!

சாதிய அரசியலில் சறுக்கிய பா.ஜ.க!

பசவராஜ் பொம்மை அரசு இடஒதுக்கீட்டில் செய்த மாற்றங்கள், பா.ஜ.க அரசின் வெற்றி வாய்ப்பை பாதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கர்நாடகாவின் முக்கிய சமூகமான லிங்காயத்துகள், பா.ஜ.கவையும் ஜனதா தளத்தையும் கைவிட்டுவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்திருப்பது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

லிங்காயத்து சமூகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பா.ஜ.க அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியை தழுவியிருக்கின்றன. வீரசைவ லிங்காயத்து சமூகத்தின் உட்பிரிவான பஞ்சமாசாலிஸ் தங்களுக்கென தனி ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியதில் தொடங்கி, லிங்காயத்து தரப்பு பா.ஜ.க மீது அதிருப்தியில் இருந்திருக்கிறது.

லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, அதே சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மையை பா.ஜ.கவினர் முன்னிறுத்தினாலும் முன்பைப் போல் லிங்காயத்துகளின் வாக்குகளை அறுவடை செய்ய முடியவில்லை. அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு போய்ச் சேர்ந்ததும் பா.ஜ.கவுக்கு முக்கிய பின்னடைவை தந்திருக்கிறது.

ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை களத்தில் இறக்கி அதில் 34 பேர், அதிலும் குறிப்பாக வீரசைவ லிங்காயத்துகளிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். பா.ஜ.கவால் 18 லிங்காயத்து உறுப்பினர்களை மட்டும் வெற்றி பெற வைக்க முடிந்திருக்கிறது. முன்னர் 38 லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்.

வீரசைவ லிங்காயத்துகளின் கோரிக்கையை ஏற்று தனி மதமாக அங்கீகரிப்பதாக முன்னர் இருந்த காங்கிரஸ் அரசு தீர்மானம் கொண்டு வந்தது. 2018ல் பா.ஜ.கவின் வாக்கு வங்கியை அசைத்துப் பார்க்கும் முயற்சி என்றாலும், பெரும்பாலான லிங்காயத்துகள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். 17 சதவீதமுள்ள லிங்காயத்து சமூகத்தில் ஏறக்குறைய 70 துணைப்பிரிவுகளும் உண்டு.

துணைப்பிரிவுகளைச் சேர்ந்த சாதியினர் தங்களுக்கென தனி இட ஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளமும் ஒரே குரலில் ஒலித்து வந்தார்கள். ஆனால், ஐந்தாண்டு முடிவில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. லிங்காயத்து சமூகம் முழுவதுமாக காங்கிரஸ் கட்சியின் வசம் வந்திருக்கிறது.

சென்ற ஆண்டு வீரசாவர்கக்கர் குறித்து சித்தராமையா தவறாக பேசியதாக சர்ச்சை எழுந்தபோது, லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது வீரசைவ-லிங்காயத் சமூகத்தை உடைப்பதற்கு முயற்சி செய்ததாகவும், அதற்கு பின்னாளில் சித்தாராமையா வருத்தம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா, முதல்வராக இருந்தபோது லிங்காயத்து மடங்கள்

செய்து வரும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக நன்கொடைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

அடிப்படையில் காங்கிரஸ் கட்சி ஒக்கலிகர்களின் கட்சியாகவே அறியப்படுகிறது. 17 சதவீதமுள்ள லிங்காயத்துகள் பெரும்பாலும் லிங்காயத்துகளை ஆதரித்தே வந்திருக்கிறார்கள். ஒருவேளை காங்கிரஸ் கட்சி, லிங்காயத்துகளுக்கு அதிகமான எண்ணிக்கையிலான தொகுதிகளை தராமல் இருந்திருந்தால் இம்முறை 20 எம்.எல்.ஏக்கள் கூட லிங்காயத்து சமூகத்திலிருந்து வந்திருக்க முடியாது என்கிறார்கள்.

எது எப்படியோ பழைய பார்முலா படி லிங்காயத்துகளுக்கு வாய்ப்பளித்து வெற்றிக்கோட்டையை காங்கிரஸ் எட்டியிருக்கிறது. இனி வரப்போகும் உள் ஒதுக்கீடு கோரிக்கைகளை எப்படி சமாளிக்கப்போகிறது என்பதுதான் ஒரு பெரிய கேள்விக்குறி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com