பாஜக மாநில நிர்வாகி விநாயகமூர்த்தி, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

பாஜக மாநில நிர்வாகி விநாயகமூர்த்தி, 
 ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்
Published on

தமிழ்நாட்டில் அதிமுக கட்சியின் கோஷ்டி மோதலை சாதகமாக பயன்படுத்தி அக்கட்சியை தம் கட்டுக்குள் வைத்திருக்கும் பாஜக, தம் கட்சி மாநில நிர்வாகியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது கேலிகூத்தாகி உள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு அதிமுக முக்கியப் புள்ளிகளை தட்டித் தூக்கி திமுகவில் இணைக்க செந்தில் பாலாஜி பல்வேறு வழிகளில் முயற்சித்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் பாஜகவின் மாநில நிர்வாகி திமுகவில் இணைந்திருப்பது கவனம் பெற்று வருகிறது.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று தமிழ்நாடு பாஜகவின் பட்டியலின மாநில பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி தலைமையில் ஈரோடு மாவட்ட பா.ஜ.க. இளைஞர் அணிச் செயலாளர் வி.வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ.வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இது தொடர்பாக என்.விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நான் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவு மாநிலப் பொதுச்செயலாளராக பணியாற்றி வநதேன். தற்போது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக, முதல்வர் பணியாற்றி வருகிறார்.

அவர் தலைமையின்கீழ் பணியாற்றவும் – கலைஞர் முதல்வராக இருந்து எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு 2009ல் வழங்கியதால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். அத்துடன், அரசுப் பணியிலும் பணியாற்றி வருகிறார்கள்.

நான், மதுரை வீரன் மக்கள் கட்சியை நடத்தி வருகிறேன். அதில் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உறுப்பினராக உள்ளார்கள். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும், இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.

 ஈரோடு கிழக்கு தொகுதியில், எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரையும், நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முதல்வர் ஆசிபெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிப்பார்கள். இத்தொகுதி முழுவதும் முழு வீச்சுடன், தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றியை பெற வைத்து, கழகத் தலைவர் அவர்கள் கரத்தில் ஒப்படைப்பேன் என்று இந்நேரத்தில் உறுதி கூறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இணைப்பு நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை கே.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com