பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றத்தில் ஜாமீன்!

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு மதுரை நீதிமன்றத்தில் ஜாமீன்!

துரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சில செய்திகளைப் பதிவிட்டு இருந்தார். அதில், ‘கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளர் ஒருவரின் உயிர் போனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மௌனம் காக்கிறார்’ என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் அணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட அந்தப் புகாரில், ‘மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியோ, விஸ்வநாத் என்ற வார்டு உறுப்பினரோ இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மீது எஸ்.ஜி.சூர்யா அவதூறு பரப்புவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு சென்னையில் எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து, பாஜகவினர் சிலர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து, எஸ்.ஜி.சூர்யா மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று எஸ்.ஜி.சூர்யா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையை நீதிபதி இன்று ஒத்தி வைத்திருந்தார். அதன்படி இன்று விசாரணைக்கு வந்த அந்த மனு மீது எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com