‘மணிப்பூர் கலவரத்தை பாஜக விரும்புகிறது’ சீமான் சாடல்!

‘மணிப்பூர் கலவரத்தை பாஜக விரும்புகிறது’ சீமான் சாடல்!
Published on

நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “தமிழகத்தில் இருக்கும் மொத்த ரவுடிகளும், ஊழல்வாதிகளும் பாஜகவில்தான் இருக்கிறார்கள். ‘எந்த நிலையிலும் நான் ஊழலுக்கு எதிராகப் பேசுவேன்’ என்று அண்ணாமலை கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை, அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். திமுகவுக்கு எதிராக மட்டும் ஊழல் பட்டியலை வெளியிட்டால் அது முழுக்க முழுக்க அரசியல் லாபத்துக்காக மட்டுமே என்றாகி விடும். மேலும், அதிமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் புனிதமானவர்கள் என்பதை காட்டுவதற்காக அண்ணாமலை முயற்சிக்கிறாரா என்கிற கேள்வியும் எழுகிறது. ஊழல் வழக்கு குறித்துப் பேசும் அண்ணாமலை, ஏன் கொடநாடு கொலை, கொள்ளை குறித்துப் பேச மறுக்கிறார். அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் அவர்களுக்கு சாதகமான பேச வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு இருக்கிறது.

மணிப்பூர் கலவரம் குறித்து திமுகவும் காங்கிரசும் பேசுவது தேர்தல் லாபத்துக்காக மட்டுமே. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின்போது பெண்கள் நிர்வாணமாக பதாகை ஏந்தி ராணுவத்துக்கு எதிராகப் போராடினார்கள். அன்று ராணுவம் பெண்களை வன்புணர்வு செய்தது. இன்று இரண்டு இனங்கள் மோதுகிறது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள்தான். மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புகிறது.

தமிழ்நாடு, கேரளா ஆந்திரா போன்ற தென்மாநிலங்களில் பிஜேபியால் காலூன்ற முடியவில்லை. அதனால் இங்கு வளர வேண்டிய கட்டாயம் இருப்பதால் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார். இதற்காக தமிழில் பேசுவது, பாரதியார் கவிதைகள், ஒளவையார் பற்றி பேசுகிறார். மேலும், தமிழ்நாட்டில் போட்டியிட்டால், நாட்டின் பிரதமராக இருந்தவரே இங்கு போட்டியிடுகிறார் என்ற அதிர்வலை ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்.

நடை பயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ நடந்து முடித்து விட்டார். அதற்குப் பிறகு ராகுல் நடந்தார். என்ன நடந்தது? நடை பயிற்சி செய்ய வேண்டுமென்றால் கடற்கரையிலோ, பூங்காவிலோ நடந்து செல்லுங்கள். ஆளும் திமுக அரசு,  ‘கருணாநிதிக்கு பின், கருணாநிதிக்கு முன் என்ற நிலைப்பாட்டை நிறுவுகிறார்கள். இந்த அரசும் அதிகாரமும் ஒரே குடும்பத்திடம் இருந்து விடாது. இந்த நிலை மாறும். அப்படி மாறும்போது அனைத்தும் தலைகீழாக மாறும்.

சுதந்திர இந்தியாவின் மிக மோசமான பிரதமர் மோடி, மிக மோசமான முதலமைச்சர் ஸ்டாலின். அமெரிக்காவில் மலக்குழியில் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த தொழில் நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர இவர்களால் முடியவில்லை. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில்தான் குடியேற வேண்டும். இந்தியாவில் யாரும் வாழ முடியாது” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com