“புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’ அணி மூலம் வரும் தேர்தலில் பாஜக விரட்டியடிக்கப்படும்” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருக்கிறார்.
எதிர்க்கட்சி கூட்டணியைக் கண்டும் பாஜக பயப்படுகிறது. குறிப்பாக, ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே நடுங்குகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.
2014ல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாஜக 2024ல் விரட்டியடிக்கப்படும். உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் பாஜக விரட்டியடிக்கப்படும்.
மீரட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ‘எதிர்க்கட்சி கூட்டணி என்றாலே இப்போது பாஜகவுக்கு நடுக்கம் ஏற்படுகிறது. ‘இந்தியா’ என்ற பெயரைக் கேட்டாலே அதற்கு பயம் வந்துவிடுகிறது என்றும் அவர் பேசி இருக்கிறார்.
‘இந்தியா’ கூட்டணி என்றாலே, நமது கலாசாரமும் சகோதரத்துவமும்தான் நினைவுக்கு வரும் என்றார் அவர். வரும் மக்களவைத் தேர்தல், நாட்டில் ஜனநாயகத்தையும் அரசியல் மாண்பையும் காப்பாற்ற விரும்புபவர்களுக்கும், அதை சீர்குலைக்க விரும்புபவர்களுக்குமான போட்டியாகும். மக்கள் நாட்டை காப்பாற்ற விரும்புவதால், மக்கள் விழிப்புடன் இருப்பதால் பாஜகவினர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள் என்றார் அவர்.
பாஜகவின் வாக்கு வங்கி அரசியல் காரணமாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிளவுக் கொள்கை காரணமாகவும் மணிப்பூரில் வன்முறை கொழுந்துவிட்டு எரிகிறது என்றும் அவர் கூறினார்.
மணிப்பூரில் மே 4ம் தேதி பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியான சம்பவத்தை சுட்டிக்காட்டிய அகிலேஷ், எதிர்க்கட்சி கூட்டணியான, ‘இந்தியா’வை தாக்கிப் பேசுவதற்கு முன் பாஜக முதலில் மணிப்பூர் சம்பவம் குறித்து பேசட்டும் என்றார். மணிப்பூர் பற்றி பேச விரும்பவில்லை என்றால் மணிப்பூரில் சமூகத்தை பிளவுபடுத்த பாஜக திட்டமிட்டது வெட்டவெளிச்சமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, மீரட்டில் இந்த மாதத் தொடக்கத்தில் சாலை விபத்து மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் உதவித் தொகையும் வழங்கப்படும் என்று அகிலேஷ் தெரிவித்தார்.
கன்வார் யாத்திரைக்கு மாநில அரசு ஒதுக்கீடு செய்த நிதியிலிருந்து இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.