ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படும்: அண்ணாமலை அறிவிப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை
Published on

பாஜக சார்பில், ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நடை பயணத்தை இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஜூலை 28) ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடை பயணத்தில் பங்கேற்பதற்காக ராமேஸ்வரம் செல்ல மதுரை விமான நிலையம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘‘பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் விளக்குவதற்காகவே இந்த நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடை பயணத்தின் மூலம் பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். இந்த நடை பயணத்தில் பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கக்கூடிய ஒரு லட்சம் புத்தகங்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு 168 நாட்கள், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாடாளுமன்ற தொகுதி வாரியாக 1700 கிலோ மீட்டர் தொலைவு நடை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறோம்.

இதில் பங்கேற்க கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். பல கூட்டணி கட்சித் தலைவர்கள் நாளை நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பதை இன்னும் உறுதி செய்யவில்லை.

திமுக அரசு மீது அமலாக்கத்துறை முன் வைக்கும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் வாய் திறக்க வேண்டும். ‘தொட்டுப்பார், சீண்டிப்பார்’ என்று ஒரு முதலமைச்சர் பேசுவது அழகு கிடையாது. ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படும்.

மேலும், கடலூர் மாவட்டத்தில் என்எல்சி விரிவாக்கத்துக்காக விளைநிலங்களை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கடலூரில் விவசாயிகளை சிரமப்படுத்திவிட்டு திருச்சியில் வேளாண் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com