மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கும் பா.ஜ.க. ஹரியானா, ஆந்திரம், அஸ்ஸாம் செல்கிறார் அமித்ஷா!

மீண்டும் தேர்தல் களத்தில் இறங்கும் பா.ஜ.க. ஹரியானா, ஆந்திரம், அஸ்ஸாம் செல்கிறார் அமித்ஷா!

கர்நாடக மாநில தேர்தல் தோல்வியால் சோர்ந்து போயிருந்த பா.ஜ.க. மீண்டும் இதர மாநில தேர்தல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதன் ஒரு பகுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மாதம் 18 ஆம் தேதி ஹரியாணா மாநிலம், சிர்சாவில் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இது தொடர்பாக பா.ஜ.க.வின் ஹரியாணா மாநில பொறுப்பாளரும் திரிபுரா மாநில முன்னாள் முதல்வருமான விப்லப் குமார் தேவ் கூறுகையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 18 ஆம் தேதி ஹரியாணா வரும் அமித்ஷா, 30 ஆம் தேதி வரை 13 நிகழ்ச்சிகளில் பங்கேற்று மோடி ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பல்வேறு கூட்டங்களில் பேசுகிறார்.

அமித்ஷா வருகையையொட்டி பா.ஜ.க. பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

ஹரியாணாவில் செளடாலா குடும்பத்தினரின் செல்வாக்கு மிக்க தொகுதியான சிர்சா மக்களவைத் தொகுதியை இந்த முறை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது. மேலும் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபிந்தசிங் ஹூடாவின் சோன்பேட் மற்றும் ரோதக் தொகுதியையும் வென்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஹரியானாவில் 10 தொகுதிகளை கைப்பற்றியிருந்த்து. 2014 தேர்தலில் சிர்சா தொகுதியை இந்திய தேசிய லோகதளம் கட்சி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணை தவிர ஆந்திர மாநிலத்துக்கும் தேர்தல் பிரசார பயணம் மேற்கொள்ள அமித்ஷாவும், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் திட்டமிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் விசாகபட்டினத்தில் ஜூன் 8 ஆம் தேதி அமித்ஷாவும், ஜூன் 10 ஆம் தேதி திருப்பதியில் ஜே.பி.நட்டாவும் பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

பின்னர் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் அஸ்ஸாம் மாநிலம் சென்று இரண்டு மெகா பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்று பேசுகின்றனர். மேலும் 14 மக்களவைத் தொகுதிகளிலும் ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர். அப்போது பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனைகள் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் சர்வானந்த சோனேவால், பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவர் வைஜயந்த் ஜெய் பாண்டா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com