மத்திய சென்னை பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீனாட்சி. இவர் சென்னை வில்லிவாக்கத்தில் குழந்தைகளுக்கென தனியாக ஒரு மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளிக்கு வரும் ராஜாஜி நகரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் குழந்தையின் கை, கால்களை கட்டிப் போட்டு, அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார் மீனாட்சி. அதோடு, தேவையில்லாமல் அந்தக் குழந்தையை அடிக்கடி தேவையில்லாமல் சீண்டும் வேலையிலும் இருந்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக அந்தக் குழந்தை அந்த மழலையர் பள்ளிக்கு வந்திருக்கிறான். கூடவே அந்தக் குழந்தை, மீனாட்சியால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டும் வந்திருக்கிறது. இதைக் கண்ட அந்த மழலையர் பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். அதையடுத்து, அதிர்ச்சியில் அந்தக் குழந்தையின் பெற்றோர் பதறியடித்துக்கொண்டு அந்த மழலையர் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். வந்த குழந்தையின் பெற்றோர் மழலையர் பள்ளி உரிமையாளர் மீனாட்சியிடம் விவரம் கேட்டு இருக்கின்றனர். அதைக் கேட்ட மீனாட்சி, அந்தக் குழந்தையின் பெற்றோருக்கு சரியான பதில் சொல்லாமல் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அந்தப் பெற்றோர் மீனாட்சி மீது புகார் தெரிவித்து இருக்கின்றனர்.
புகாரின் பேரில் அந்தப் பள்ளிக்குச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். விசாரணையில் பாஜக நிர்வாகி மீனாட்சி அந்தக் குழந்தையை கொடுமைப்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மழலையர் பள்ளியின் உரிமையாளரும், பாஜக மத்திய சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான மீனாட்சி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனாட்சியின் மீது ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.