இரத்த தானம் விழிப்புணர்வு - சேலத்தில் அதிக ரத்தம் சேகரிப்பு!

இரத்த தானம் விழிப்புணர்வு - சேலத்தில் அதிக ரத்தம் சேகரிப்பு!

நீரின்றி அமையாது உலகு என்பது போல், ரத்த ஓட்டம் இன்றி சிறக்காது நம் உடல் என்பது மருத்துவமொழி. இந்த மருத்துவ மொழிக்கேற்ப ரத்தத்தின் அவசியத்தை விபத்துகள், தாக்குதல்கள், வன்முறை சம்பவங்களில் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைகளுக்கு ஆயத்தமாகும் நோயாளிகள் மூலம் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளோம். உலகெங்கும் பல்வேறு விதங்களில் உடல் நலன் பாதிக்கப்படுவோரின்  உயிரைக் காக்கும் ரத்தத்தின் அத்தியாவசியத்தை உணர்ந்த சேவை மனிதர்கள் கடந்த சில வருடங்களாக ரத்த தானத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்து வருகின்றனர். இவ்வகையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிய சிறிய பார்வை இங்கு.

     குறைந்தபட்சம் 45 கிலோ எடை கொண்ட 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட ஆரோக்கியமான மனிதர்கள் யார் வேண்டுமானாலும் ரத்ததானம் செய்யலாம். ஒருவர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தால் உடல் ஆரோக்கியம் பெறும். அதோடு மாரடைப்பு, ரத்த அழுத்தம், போன்ற நோய் பாதிப்புகளும் அவருக்கு வருவது தவிர்க்கப்படுகிறது. மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் 144 முறை ரத்த தானம் செய்யலாம். உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும் சுயநலத்துடன் ரத்ததானம் செய்யத் தவறுபவர்கள் பிறருக்கு உதவும் வாய்ப்பை இழப்பது மட்டுமல்ல தானம் தருவதின் மூலம் தங்கள் ஆரோக்கியமும் மேம்படும் என்பதையும் அறிவதில்லை.

      சேலத்தில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்ததற்கு சான்றாக கடந்தாண்டில் மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடையாளர் களிடமிருந்து 18,533 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டு இரத்த வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது.

   கொரோனா பரவலுக்கு முந்தைய ஆண்டில் (2019) 18,000 யூனிட்டுக்கு அதிகமான ரத்தம் தானமாக பெறப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் இது சற்று குறைந்து 2020 ம் ஆண்டில் 14.918 யூனிட்டுகளும் 2021ம் ஆண்டில் 14.152  யூனிட் ரத்தமும் தானமாக பெறப்பட்டது. கடந்த ஆண்டு மாநகரம், மாவட்டம் என்று பல்வேறு பகுதிகளில் 96 முகாம்கள் நடத்தப்பட்டு,  18,533  யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 11 தாலுகா மருத்துவமனைகள் என்று மொத்தம் 24,217 பேர் ரத்த தானம் செய்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக தரப்படும் ரத்தமானது ரத்த சிவப்பணுக்கள், தட்டை அணுக்கள், பிளாஸ்மா, என்று மூன்று வகையாகப் பிரித்து தேவையான நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

       இது குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மற்றும்  மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் ரவீந்திரன் கூறியது,

மருத்துவர் ரவீந்திரன்
மருத்துவர் ரவீந்திரன்

“இரத்ததானம் செய்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது. இரத்ததானத்தால் உடலில் புதிய ரத்தம் உருவாகி அது நமக்கு புத்துணர்வை கொடுக்கும். இரத்ததானம் செய்வதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. மாறாக நன்மைகளே அதிகம் கிடைக்கிறது. அரசு மருத்துவ மனையில் ரத்ததானம் செய்வதால் அது வியாபார நோக்கம் இல்லாமல் சிறந்த சமூக சேவையாகவும் இருக்கிறது. நம்மால் பலருக்கும் நன்மை கிடைக்கிறது என்ற விழிப்புணர்வு தற்போது இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ரத்ததானம் பெறுவதில் முக்கிய இடத்தில் இருப்பதற்கு இந்த விழிப்புணர்வே காரணம்.

உலகம் முழுவதும் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் பல வழிகளில் ரத்ததானம் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. பொதுநலத்துடன் சேவை புரியும் ரத்தக்கொடையாளர்களை ஒன்றிய மாநில அரசுகளும் கவுரவித்து பெருமைப்படுத்தி  வருகிறது. இது போன்ற பல்வேறு பணிகளால் ரத்ததானம் என்பது சமீப காலமாக மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்       

        சேலம் மாவட்டத்தில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டுள்ளதால் பொது மக்களுடன் பாகுபாடின்றி  அரசியல் கட்சியினர், திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் என்று பலரும் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இதற்காக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 90-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளது.. இதனால் அவசர சிகிச்சைக்கு தயாராகும் நோயாளி களுக்கு உரிய ரத்தம் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உடனடியாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

உயிரைக் காக்கும் ரத்த தானம் பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தானம் தந்தவரை மறக்காமல் நன்றி யுடன் நினைவு கூர்ந்து வாழ்த்துக்கள் வழங்குவதே தானம் செய்தவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம் .

      ஆகவே, நாமும் நம்மால் முடிந்த அளவு ரத்த தானம் குறித்த விழிப்புணர்வில் பங்கு பெற்று சமூக ஆரோக்கி யத்திற்கு உதவுவோமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com