Paytm மூலம் வசூலிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்!

Paytm மூலம் வசூலிக்கும் பூம் பூம் மாட்டுக்காரர்!

ஹைதராபாத்தில் பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர், புதுமையான முறையில் தனது மாட்டின் கழுத்தில் க்யூ ஆர் குறியீட்டுடன் Paytm அட்டையை தொங்கவிட்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வருகிறார்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது இப்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த வகையான பண பரிமாற்றத்தில் இந்தியா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. கையில் பணம் இல்லாவிட்டாலும் க்யூ ஆர் குறியீட்டின் மூலம் வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்துவதும் வேறு ஒருவருக்கு பணம் கொடுப்பதும் எளிதாக இருப்பதால் மக்கள் இதை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.

சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான படம் ஒன்று Paytm முறையில் பணம் செலுத்தும் நடைமுறை எப்படிப் பரவலாகிவிட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.

ட்விட்டர் வசதியை பயன்படுத்தி வரும் சந்தீப் என்பவர் ஹைதராபாத்தில், கங்கிரெட்டு சமூகத்தைச் சேர்ந்த பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவர் Paytm மூலம் மக்களிடம் பிச்சை எடுக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அந்த பூம்பூம் மாட்டுக்காரர் Paytm க்யூ ஆர் குறியீட்டை மாட்டின் கழுத்தில் கட்டி டிஜிட்டல் முறையில் மக்களிடம் பணம் பெறுகிறார்.

இந்தப் படத்தை வெளியிட்டுள்ள சந்தீப், அதன் கீழ் 'ஹாப்பி போகி! மகர சங்கராந்தி! ஹைப்பி டிஜிட்டல் இந்தியா! ஹாப்பி Paytm பூம்பூம் மாட்டுக்கார்ர்!' என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் இவர்களது தொழில் புரட்டாசி மாதத்திலிருந்து மகரசங்கராந்தி வரை களைகட்டும்.

Paytm வசதியை மக்கள் தங்கள் வசதியை கருத்தில் கொண்டு ஏற்றுக்கொண்டுள்ளது மட்டுமல்ல; நவீன உலகில் என்னென்ன வழிகளில் அதை பயன்படுத்த முடியும் என்பதையும் தெரிந்துவைத்துள்ளனர்.

தமிழகத்திலும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மராட்டியத்திலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் தமிழகத்துக்கு வந்தவர்கள்.

இவர்கள் சாலை ஓரங்கள், மலையடிவாரம், கிராமப்புறங்களில் உள்ள திறந்தவெளியில்தான் வசிப்பார்கள். விடியற்காலை நேரத்தில் ஜக்கம்மாவை வணங்கிவிட்டு அலங்கரிக்கப்பட்ட மாட்டுடன், நாயனம் ஊதிக் கொண்டே வீடு வீடாகச் சென்று குறி சொல்லி பிச்சையெடுப்பார்கள். காசு அல்லது பொருள் கொடுத்தால் மாடு கழுத்தை ஆட்டி ஆசீர்வதிக்கும். முன்பு பழைய துணி, தானியங்களை மக்கள் கொடுத்து வந்தார்கள். பின்னர் காசு கொடுத்தனர். இப்போது மக்கள் பணம் கொடுக்க வசதியாக Paytm வந்துவிட்டது.

'ஊருக்கு நல்ல காலம் பொறக்குது' என்று சொல்லும் இவர்களுக்கு பேடிஎம் மூலம் நல்லகாலம் பிறந்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com