இந்தியாவிற்குள் எல்லைப் பிரச்னையா?

 சஞ்சய் ரெளத்
சஞ்சய் ரெளத்

கர்நாடகம்-மகாராஷ்டிரம் இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வரும் நிலையில், இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுவது போல் நாங்களும் கர்நாடக எல்லைக்குள் நுழைவோம் என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரெளத்.

கர்நாடகத்திற்குள் நுழைய எங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வுகாணவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், கர்நாடக முதல்வர் பிரச்னையை தீயிட்டு வளர்க்கிறார். மகாராஷ்டிரத்தில் இப்போதுள்ள அரசு பலவீனமாக உள்ளது. அதனால் அவர்களால் உறுதியான நிலையை எடுக்க முடியவில்லை என்றார் ரெளத்.

கர்நாடகம்- மகாராஷ்டிரம் இடையே எல்லைப் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது.

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே அரசு பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் இப்பிரச்னையை ஆவேசத்துடன் எழுப்பி வருகின்றன.

சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பெல்காம் நகருக்குள் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நடைபெற்ற கூட்டத்தின்போது பெல்காம் செல்பவர்களை யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அப்படி இருக்கும்போது மாவட்ட ஆட்சியர் எப்படி தடுத்து நிறுத்தலாம் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இந்த விவகாரத்தில் அரசியல்கூடாது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அடக்கமாக (?) பதிலளித்து விட்டார்!

மகாராஷ்டிரம்-கர்நாடக எல்லையில் பெலகாவிக்குள் நுழைய அனுமதிக்கும்படி கோரி மகாராஷ்டிர எகிகரன் சமிதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடந்த திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com