175கிமீ வேகத்தில் பந்துவீச்சு: யார் இந்த மதீஷா பதிரணா?

175கிமீ வேகத்தில் பந்துவீச்சு: யார் இந்த மதீஷா பதிரணா?
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு எல்லா தரப்பு பேட்ஸ்மேன்களையும் பார்த்திருக்கிறதோ அதே அளவிலான அற்புதமான பவுலர்களையும் கண்டுள்ளது. டக் பொலிங்கர், சுட்டிக் குழந்தை சாம்கரன் ஆகியோரின் வரிசையில் தற்போது புதியதாக இணைந்திருப்பவர் மதீஷா பதிரணா என்ற இளம் இலங்கை வீரர். 

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி நடந்த சிஎஸ்கே-ஆர்சிபி இடையே நடைபெற்ற ஆட்டத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். முதலில் பேட்டிங் ஆடி 226 ஹிமாலய ரன்களை CSK குவித்த போதும், இறுதியில் போராடிதான் வெற்றி பெற்றனர். RCB அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை மதீஷா பதிரணா வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, சென்னை அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். 

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பின்னர் பேசிய மதீஷா பதிரணா, "முதலில் நான் வீசிய இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் போயிருந்ததால் மிகவும் பதற்றமாக இருந்தேன். அப்போது தோனி என்னிடம் வந்து அமைதியாக இரு, எதற்கும் கவலைப்படாதே, உன்னுடைய பலத்தை நம்பு என்றதால் நானும் அதையே செய்தேன்" என்றார். 

டிசம்பர் 18, 2002ஆம் ஆண்டு இலங்கையில் கண்டி நகரில் மதீஷா பதிரணா பிறந்துள்ளார். முதல் ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி விளையாடியபோது இவருக்கு 6 வயது தான். ஆனால் தற்போது அவருடைய இருபதாவது வயதில் சிஎஸ்கே அணியின் டெத் ஓவர் நிபுணராக உருவெடுத்து வருகிறார். இவருடைய பந்துவீச்சு முறை இலங்கையின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் லசித் மலிங்காவோடு ஒத்துப் போவதால் இவரை 'பேபி மலிங்கா' என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இவருடைய பந்துவீச்சைப் பார்த்துவிட்டு மலிங்காவும் வெகுவாக பாராட்டியிருக்கிறார். 

கடந்த ஆண்டு முதன் முதலில் குஜராத் அணிக்கு எதிராக களமிறங்கிய பதிரணா அறிமுக ஆட்டத்திலேயே முதல் பந்தில் சுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்து அசத்தியிருக்கிறார். மேலும், இந்த போட்டியில் மொத்தம் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதால், "டெத் ஓவர்களில் மலிங்காவைப் போலவே சிறப்பாக இவர் பந்து வீசுகிறார். இவரை எதிர்கொள்வது சிரமமானது. ஸ்லோ பால்களையும் சிறப்பாக வீசுவதால், இவரது பந்துகளை கவனமாகத்தான் பார்த்து விளையாட வேண்டும்" என தோனியும் வெகுவாக பாராட்டி இருக்கிறார். 

175 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய பத்திரணா?

தன்னுடைய 17 வயதில், இந்தியாவுக்கு எதிரான 19 வயதினருக்குட்பட்ட ஆட்டத்தில், தற்போது ராஜஸ்தான் அணியிலிருக்கும் யாஷஸ்வி ஜெயஸ்வாலுக்கு பந்து வீசியபோது, அதன் வேகம் 175 கிலோ மீட்டர் என வேகத்தை கணக்கிடும் கருவி காட்டியது. இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சோயப் அக்தர் வீசிய 161.3 கிலோ மீட்டர் வேகம்தான், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகம் என சொல்லப்பட்டு வந்த நிலையில், இதை பதிரணா முறியடித்துவிட்டார் என்று எண்ணப்பட்டது. ஆனால் வேகம் காட்டும் கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அவ்வாறு காட்டியதாக பின்னர் தெரியவந்தது. இருப்பினும் இந்த செய்தியால் அச்சமயத்தில் இவர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். 

தற்போது, இவர் சென்னை அணியில் மிகச்சிறப்பாக பந்து வீசி வருவது, CSK ரசிகர்களை குதூகலத்தில் அழுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com