50% எடை குறைவு... 100% அதிக பாதுகாப்பு! BPCL,HPCL அறிமுகப்படுத்தும் புதிய 'காம்போசிட்' சிலிண்டர்கள்!

துருப்பிடிக்காத ஃபைபர் கிளாஸ் தொழில்நுட்பம்; கேஸ் அளவை நேரடியாகப் பார்க்கும் வசதியுடன் புதிய எல்பிஜி உருளைகள்!
'காம்போசிட்' சிலிண்டர்
'காம்போசிட்' சிலிண்டர்AI Image
Updated on

எரிவாயு சிலிண்டர் குறித்த பாதுகாப்பு அச்சத்துக்கு தீர்வாக நாட்டின் முக்கிய எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான BPCL மற்றும் HPCL, எரிவாயு சிலிண்டருக்கான தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்ற தகவல் மகிழ்ச்சி தந்துள்ளது.

சமீபத்தில் பாரத்கேஸ் லைட் ஜிப் (Bharatgas Lite ZIP) மற்றும் ஹெச்பி நாவ்யா (HP Navya) என்ற பெயர்களில் இந்த நிறுவனங்கள் புதிய தலைமுறை கலப்பு எல்பிஜி சிலிண்டர்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. குறிப்பாக அன்றாடம் தற்போது பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய இரும்பு எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு (Composite) எல்பிஜி சிலிண்டர்கள் ஆகும். இவை 50% வரை எடை குறைவாகவும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாதாரண எல்பிஜி (LPG) சிலிண்டரின் கொள்ளளவு 14.2 கிலோ ஆகும். ஆனால், புதிய காம்போசிட் சிலிண்டர் 10 கிலோ மற்றும் 5 கிலோ போன்ற எடை குறைந்த, கையாள்வதற்கு வசதியான வகைகளில் கிடைக்கிறது. குறைந்த எடை மற்றும் கையில் பிடிப்பதற்கு ஏற்ற மேம்பட்ட வடிவமைப்பு காரணமாக, இதை வீட்டிற்குள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கோ அல்லது படிக்கட்டுகளில் ஏற்றி இறக்குவதற்கோ மிகவும் எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனால், பெண்களும் முதியவர்களும் கூட இதை எளிதாகக் கையாள முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

'காம்போசிட்' சிலிண்டர்
'காம்போசிட்' சிலிண்டர்Source:hub news

மேலும் சாதாரண உருளைகள் கனமான இரும்பினால் செய்யப்படுகின்றன. ஆனால், இந்த 'காம்போசிட்' உருளை மூன்று அடுக்குகளைக் கொண்டது. இதில் ஃபைபர் கிளாஸ் (fiberglass) மற்றும் உயர்தர பாலிமர்கள் பயன்படுத்தப்படுவதால் துருப்பிடிக்கும் பிரச்சனை இல்லை. எனவே, தரையில் துரு கறைகள் படியும் அபாயமும் இல்லை. பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் மட்டுமல்லாது, இதன் வடிவமைப்பும் மிகவும் நவீனமானது என்பதால் மாடுலர் கிச்சனிலும் இதை மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லை

மேலும் இரும்புச் சிலிண்டர்களை விடக் கலப்புப் பொருள் (composite) சிலிண்டர்கள் மிகவும் பாதுகாப்பானவை. மேம்பட்ட பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வால்வு மற்றும் சீலிங் (sealing) அமைப்பு, எரிவாயு கசிவுக்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்கும் வகையில் அதாவது அதிக வெப்பநிலையில் வெடிப்பு அபாயத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டாலும், சாதாரண இரும்புச் சிலிண்டர்களைப் போல இவை வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதில்லை. இதன் உறுதியான ஃபைபர்-கிளாஸ் (fiberglass) அமைப்பு காரணமாக, கீழே விழுதல் அல்லது பலமான மோதல் போன்ற சூழல்களை தாங்கிக்கொள்ளும் வகையில் உள்ளது.

அத்துடன் உள்ளே எவ்வளவு எல்பிஜி உள்ளது என்பதை நேரடியாகப் பார்க்கும் வசதி இந்த புதிய தொழில்நுட்பத்திலான சிலிண்டரின் மிகப்பெரிய நன்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சிலிண்டரின் நடுப்பகுதி ஒளி ஊடுருவக்கூடியதாக இருப்பதால், எரிவாயுவின் அளவை எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. முன்பெல்லாம், இரும்புச் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை அறியும் வழி தெரியாமல் எப்போது எரிவாயு தீரும் என்ற அழுத்தத்தில் இருந்து தீர்வு கிடைத்துள்ளது. இப்போது பயனர்கள் எரிவாயு தீரும் தருவாயை எளிதாக அறிந்துகொண்டு, சரியான நேரத்தில் அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிமுகப்படுத்திய புதிய சேவையான இலகுரக (Bharatgas Lite) கலப்பு சிலிண்டருடன், விரைவு புதிய இணைப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது என்றும் மும்பையில் தொடங்கி, 2026 ஆகஸ்ட் 15-க்குள் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதேபோல் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஹெச்பி நாவ்யா (HP Navya ) எனப்படும் 10 கிலோ கலப்பு எல்பிஜி சிலிண்டர் முதற்கட்டமாக பெங்களூருவில் விரைவு விநியோக சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.சிறிய குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் தனியாக வசிப்போருக்காக இந்த சிலிண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புதிய எரிவாயு சிலிண்டர் அறிமுகங்களும் இலகுரக, துருப்பிடிக்காத, எரிவாயு அளவை நேரடியாகக் காணக்கூடிய, பாதுகாப்பு அம்சங்கள் அதிகமுள்ள புதிய தலைமுறை கலப்பு எல்பிஜி சிலிண்டர்கள் என்பதால் பயனாளர்களுக்கு வசதியான மற்றும் நவீன சமையல் எரிவாயு அனுபவத்தை நிச்சயமாக வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்:
மொபைல் திரைக்குள் தொலைந்த நிம்மதி: தாத்தா-பாட்டி சொன்ன எளிய தீர்வு!
'காம்போசிட்' சிலிண்டர்
இதையும் படியுங்கள்:
ஒருமுறை சார்ஜ் போட்டா 142 கி.மீ ஓடுமா? பெட்ரோல் பங்கிற்கு குட்பை சொல்லுங்க மக்களே!
'காம்போசிட்' சிலிண்டர்
logo
Kalki Online
kalkionline.com