
தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) அதிக அக்கறை காட்டி வருகிறது. இந்த வாரியம் அவ்வப்போது ஆசிரியர் தகுதித் தேர்வை (Teachers Eligibility Test) நடத்தி, தகுதியான ஆசிரியர்களை நியமித்து வருகிறது. இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவரும் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 ஆண்டுகளை நிறைவு செய்த மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனி ஆசிரியர் பணியில் நீடிக்க முடியும். இல்லையேல் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5 ஆண்டுகளுக்கும் குறைவான பணி அனுபவம் கொண்டவர்களுக்கு மட்டும் TET தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வருங்காலத்தில் 5 ஆண்டுகளைக் கடக்கும் ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர TET தேர்வு தான் முதல்படியாக உள்ளது. இன்று முதல் ஆசிரியர் பணியில் சேர, தொடர்ந்து பணி புரிய மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்வில் தேர்ச்சி என்பது கட்டாயமாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஏற்கனவே சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
TET தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆசிரியர்கள் வேலையை விட்டுச் செல்லலாம் அல்லது இறுதி சலுகைகளைப் பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் ஆசிரியர்களின் தகுதியை சோதிக்கவே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.