#BREAKING: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக-வினர் கைது!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய நிலையில் போலீஸார் அவர்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அதிமுக எம்.எல். ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால், சபாநாயகர் அவர்களை நேற்று 1 நாள் சட்டப் பேரவையில் வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, இன்று வள்ளுவர் கோட்டம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். 

இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். ஆனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில்  அனுமதி மறுக்கப்பட்டது.

 இதனால், தடையை மீறி அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுக ஆட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்காததால், இபிஎஸ் உட்பட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து தயார் நிலையில் இருந்த பேருந்தில் அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com