

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் முன்னணி கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்த தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகினறன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்தாலும், தற்போது காங்கிரஸ் தவெக உடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்த நிலையில், கூட்டணி குறித்து எந்த முடிவையும் அக்கட்சி வெளியிடாமல் இருந்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருப்பது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகத்திற்கு வருகை தந்து எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமிதஅ ஷா தமிழகத்திற்கு வந்தபோதிலும், எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல், பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சரி செய்து, கூட்டணியில் இணைக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தினார். எந்த நிலையிலும் பாமக ஓட்டுகள் சிதறி விடக்கூடாது என்பதில் அமித் ஷா தெளிவாக இருக்கிறார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய 2 கட்சிகளும் அதிமுக கூட்டணியில் தான் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சற்று முன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற பாமக, 3.8% வாக்குகளையும் பெற்றது.
இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்தச் சூழலில் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகம் போன்றவற்றை கலந்தாலோசித்து வருகிறார்.
பாமக கட்சியில் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், தேர்தலுக்குள் தந்தையும் மகனும் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை இருவரும் இணையவில்லை எனில், அது அதிமுக கூட்டணிக்கும் இழப்பை ஏற்படுத்தி விடும். ஆகையால் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இன்றைக்கு முன்னதாக பாமகவில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய எடப்பாடி பழனிசாமி முயல்வார் என தெரிகிறது.
மேலும் அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகளை கேட்க அன்புமணி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ராமன் தாஸ் மற்றும் அன்புமணியை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுக இறங்கியது. தேர்தலுக்குள் இபிஎஸ், பாமகவின் இரு தரப்பையும் ஒன்றிணைத்து விடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இபிஎஸ் அன்புமணி சந்திப்பு தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இன்று (ஜன.7) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும். இது இயற்கையான கூட்டணி. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
அதிமுக தொண்டர்கள் விரும்பியபடி கூட்டணி அமைத்துள்ளோம். இது வெற்றி கூட்டணி. மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற லட்சியத்தின் அடிப்படையில், வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கான திட்டங்களை கொடுக்க, 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். மற்றதை பின்னர் அறிவிப்போம்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.