தாய்ப்பால் தானம்! கோவைப் பெண் சாதனை!

தாய்ப்பால் தானம்! கோவைப் பெண் சாதனை!

கோவையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கி சாதனை படைத்துள்ளார். இவர் இரண்டு குழந்தை களுக்குத் தாயானவர்.

கோவை வடவள்ளி டி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா, இவருக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த 7 மாதங்களாக தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார்.

ஊட்டச்சத்து குறைபாடுடைய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் ஒன்று மட்டுமே தீர்வாக உள்ளது. அதனால், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இத்தேவையை அறிந்த ஸ்ரீவித்யா தனது குழந்தைக்குப் போக மீதமாக உள்ள தாய்ப்பாலை தானமாக வழங்க முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது கணவருடன் கலந்து பேசியுள்ளார். தனது மனைவியின் செயலைப் பாராட்டியதோடு நிற்காமல், தாய்ப்பாலை தானமாக வழங்க உதவியுள்ளார். அதன்படி மகப்பேறு மருத்துவர்கள்  உதவியுடன் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அமிர்தம் தாய்ப்பால் தானம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக தாய்ப்பாலை தானமாக வழங்கி வருகிறார்.

இதுவரை கடந்த 7 மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பாலை ஆதரவற்ற குழந்தைகளுக்கு தானமாக வழங்கியுள்ளார் இந்த அற்புதத் தாய். இவரது செயலைப் பாராட்டி ஏசியா புக்ஸ் ஆப் ரெகார்ட் சான்று வழங்கி இவரைக் கௌர வித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீவித்யா கூறுகையில், தாய்ப்பால் தானம் செய்வதால் நமது உடலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது. தொடர்ந்து பால் சுரந்து இருந்துகொண்டேதான்  இருக்கும். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு நாம் செய்யும் இந்த உதவி அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். அனைவரும் தாய்பால் தானம் வழங்க முன் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com