3 லட்சம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

3 லட்சம் ஆண்டுகள் பழமையான கற்கோடாரிகளை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
Editor 1
Published on

நாம் கீழடியின் தொன்மைப் பெருமையைப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், பிரிட்டன்காரர்களும் பெருமைபேச ஒரு பிடிமானம் கிடைத்திருக்கிறது, அவர்களுக்கு! ஆம், இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியான கெண்ட் எனும் வட்டாரத்தில், அண்மையில் மிக முக்கியமான அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் கண்டெடுக்கப்பட்ட 800 பழம்பொருட்கள், சுமார் மூன்று இலட்சம் ஆண்டுகள் பழமையானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பழம்பொருட்கள் எல்லாம் புதைகுழிகளை மூடியவாறு இருந்தநிலையில் கண்டறியப்பட்டன. அத்துடன் இப்பகுதியில் மிகப் பழமையான ஆறு ஓடியதன் தடமும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வை நடத்திய யுசிஎல் தொல்லியல் ஆய்வுநிறுவனத்தின் இலெட்டி இங்க்ரே கூறும் இன்னொரு தகவல், ஆச்சர்யத்தின் அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது. ஏராளமான கற்கருவிகள் எங்களுக்கு கிடைத்தன; இவற்றில் இரண்டு கற்கோடாரிகள் தலா 22 செண்டிமீட்டருக்கும் மேல் நீளம் கொண்டவை; இதைவிட பிரமாண்டமான ஒன்றும் இந்த அகழாய்வில் கிடைத்தது என பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் சொல்கிறார்.

அந்தக் கோடாரியின் நீளம் கிட்டத்தட்ட ஓர் அடி; அதாவது 29.5 செமீ நீளம்; இதுவரை இந்த அளவுக்கு பெரிய கற்கருவிகள் பிரிட்டன் அகழாய்வுகளில் கண்டறியப்படவில்லை என்பதுதான் சிறப்பு. மெட்வே பள்ளத்தாக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வாய்வு, ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கேள்விமேல் கேள்விகளை எழுப்பிவிட்டு உள்ளது. ஆய்வாளர் இங்க்ரேயின் கருத்தப்படி, இவ்வளவு பெரிய கற்கோடாரிகளை மனிதர்கள் பயன்படுத்தியிருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். கைக்கு அடக்கமாகவே பெரும்பாலான தொல்கால கற்கருவிகள் கிடைத்திருக்கின்றன. எனவே, இவற்றைப் பயன்பாட்டுக்கு என இல்லாமல், காட்சிக்காகவோ வணங்குவதற்காகவோ என வேறு வகையில் இருந்திருக்கக்கூடும் என்றும் இங்க்ரே குழுவினர் கருதுகின்றனர்.

ஆனாலும், ஆதிகால மனிதர்கள்தான் இதை உருவாக்கினார்களா வேறு எந்த உயிரினமும் உருவாக்கி இருக்கலாமா என்றும்கூட ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கின்றனர். கெண்ட் எனும் இந்தப் பகுதியில் ஒரு காலத்தில் அடர் வனமான மரங்கள் நிறைந்த மலைகளும் ஆறுகள் ஓடிய இடமாக இருந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருதுகோளாக இருக்கிறது. செம்மான்களும் குதிரைகளும் சிங்கங்கள், நேரான தந்தங்களைக் கொண்ட யானைகள் உட்பட்ட வேறு சில பாலூட்டி விலங்குகளும் இங்கு உயிர் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அவர்களின் உத்தேசம்.

அந்தக் காலகட்டம் என்பது இந்த பூமியில் பழம் பனியுகம் எனக் கூறப்படும் கட்டமாக, குறைந்தது இன்றைக்கு 2.5 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கவேண்டும் என்றும், அப்படியொரு நிலையிலிருந்து பிரிட்டன் இப்போதைய நிலைமைக்கு எப்படி உருமாறியது என்பதை இந்த அகழாய்வு உறுதிப்படுத்தக்கூடும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com