உடைந்த கட்டில் சீதனமா- குமுறிய மணமகன், திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!

உடைந்த கட்டில் சீதனமா- குமுறிய மணமகன், திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்!
Published on

மணமகள் வீட்டில் இருந்து சீதனமாக வழங்கப்பட்ட கட்டில் உடைந்திருந்ததாக கூறி, மணமகன் திருமணத்துக்கு வர மறுத்தார். இதனால் அதிருப்தியடைந்த பெண் வீட்டார், திருமணத்தையே நிறுத்திவிட்டனர்.

ஹைதராபாத் அருகே, பந்தலகுடா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் ஜக்காரியா (26) என்பவருக்கும் கடந்த 13 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது மணமகன் வீட்டாரிடம் தரவேண்டிய சீதனம் குறித்து பேசப்பட்டது. மேலும் இருவருக்கும் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை பந்தலகுடாவில் உள்ள மசூதியில் நடத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

உள்ளூர் வழக்கப்படி திருமணத்துக்கு முன்பாகவே மணமகள் வீட்டார், மணமகன் வீட்டாருக்கு சீதனம் கொடுக்க வேண்டும். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை மணமகள் வீட்டிலிருந்து மணமகன் வீட்டிற்கு பல்வேறு சீதனங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

அவர்கள் அனுப்பிய சீதனத்தில் கட்டில் ஒன்று உடைந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் ஜக்காரியா, பழைய கட்டிலை சீதனமாக வழங்கியதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மசூதியில் திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் ஜக்காரியா அங்கு வரவில்லை.

இதையடுத்து மணமகளின் தந்தை, ஜக்காரியாவின் வீட்டிற்கு நேரில் சென்று கேட்டபோது பழைய கட்டிலை சீதமான கொடுத்து ஏமாற்றிவிட்டதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் திருமணத்துக்கு வரமுடியாது என்றும் கூறினார். இது குறித்து மணமகளின் தந்தை போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து ஜக்காரியாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஜக்காரியா கூறினார். எனினும் தங்கள் பெண்ணுக்கு இப்படிப்பட்ட மணமகன் தேவையில்லை என்று கூறி பெண் வீட்டார் திருமணத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com